கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க போகிறது தி.மு.க. இளைஞர் அணி மாநாடு
சேலம் தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
தி.மு.க. இளைஞரணி மாநாட்டை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்ய வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டு முறை இயற்கை பேரிடரால் ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணி 2வது மாநாடு 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காகத் தனி விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் ஒருநாள் முன்னதாகவே சேலம் செல்ல இருக்கிறார்.
இந்த சேலம் மாநாடு பெத்தநாயகன்பாளையம் பகுதியில் அமைக்கப் பட்டுள்ள அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக 105 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு வளாகம் அமைக்கப்பட்டு, அங்கே பிரம்மாண்ட மேடையும் போடப்பட்டுள்ளது. இது இரண்டாவது இளைஞரணி மாநாடு என்பது மிகமிக முக்கியம். முதல் மாநாடு தந்தை ஸ்டாலின் தலைமையில். இரண்டாவது மாநாடு மகன் உதயநிதி தலைமையில் நடக்கிறது.
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி அருகே தான் உள்ளது இந்தப் பெத்தநாயகன்பாளையம் என்ற ஊர். அங்கே அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுப் பந்தலை இன்றே பொதுமக்கள் வந்து பார்வையிடத் தொடங்கிவிட்டனர். ஏறக்குறைய தற்காலிக டூரிங் ஸ்பாட் ஆகி உள்ளது இந்த இடம். மாநாட்டுக்கு வருகைதரும் அத்தனை இளைஞரணி தொண்டர்களும் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொண்டர்களுக்காக ஒன்றரை லட்சம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.
4லட்சம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என உதயநிதி ஸ்டாலினே சொல்லி இருக்கிறார். இம்மாநாட்டு நுழைவாயிலில் பெரியார் புகைப்படம் அமைக்கப்பட்டுள்ளது. அதே வரிசையில் அண்ணா, கலைஞர் ஆகியோருக்கும் நுழைவு வாயில் உள்ளது. அதைப்போலவே ஸ்டாலின், உதயநிதிக்கும் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. ஆக, திராவிட இயக்கத்தின் தலைவர்களின் வரிசையில் உதயநிதியும் இடம்பிடித்துள்ளார். இதனைக் கடந்து உள்ளே சென்றால், 'முரசொலி' மாறன் பெயரில் ஒரு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக தி.மு.க. இளைஞரணி வரலாற்றை எடுத்துச் சொல்லும் விதமாகச் சிறப்புப் புகைப்படக் கண்காட்சி அமைக்கப் பட்டுள்ளது. அதனையடுத்து முரசொலி பழைய அலுவலக தோற்றத்தில் ஒரு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாகப் புத்தக விற்பனை நிலையம் ஒன்று செயல்பட உள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த மாநாட்டு அரங்கமே வேலூர் கோட்டையைப் போன்ற வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு வளாகத்தில் முகப்புப் பகுதியில் பெரியார், அண்ணாதுரை, மு.கருணாநிதி, அன்பழகன் ஆகிய தலைவர்களுக்குச் சிலைகள் அமைக்கப் பட்டுள்ளன.
அமைச்சர்கள், வி.வி.ஐ.பி.க்களுக்கு மிக உயர்ந்த தரத்திலான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்சிக் கொடியை ஏற்றுவதற்காக 100 அடி உயரத்தில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்களின் வருகைக்கு ஏற்ப, கழிவறைகள், ஓய்வறைகள், சாப்பாட்டுப் பந்திக்கான அரங்கம் எனப் பல கோணங்களில் யோசித்து யோசித்து பிரம்மாண்டமாக ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இந்த மாநாட்டில் மிகப்பெரிய ஹைலட் ஆக ட்ரோன்ஷோ ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அந்த ஷோன் ஷோ மூலம் கட்சியின் தலைவர்கள் வானத்தில் தோன்றி காட்சி தர உள்ளனர்.
மேலும் நீட் தேர்வுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் வாங்கிய 85 லட்சம் பேரின் கையெழுத்தை முதல்வரிடம் ஒப்படைக்க உள்ளார் உதயநிதி. அதன் பின்னர் அது ஒன்றிய அரசிடம் வழங்கப்பட்ட உள்ளது. மொத்தம் 22 பேச்சாளர் பேசுகிறார்கள். அவ்வளவு பேருக்கும் தனித்தனி தலைப்புகள். 2 கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதில் சினிமா ஆடல் பாடல்கள் இல்லை. ஒன்றிய அரசு தமிழ்நாட்டை எப்படிப் புறக்கணிக்கிறது. திமுகவினால் தமிழ்நாடு அடைந்த பலன்கள் என்ன? இப்படி வடிவமைக்கப் பட்டுள்ளது. அதைப்போல் தெருக்குரல் அறிவு அம்பேத்கர், பெரியார், கலைஞரைப் பற்றி மூன்று பாடல்களைப் பாடுகிறார்.
இந்த மாநாட்டுக்கு 4 லட்சம் இளைஞர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். கின்னஸ் ரெக்கார்ட் செய்வதற்கான முயற்சி ஒரு பக்கம் நடக்கிறது. இந்த மாநாடு பற்றி உதயநிதி ஒரு சிறப்பு நேர்காணல் கொடுத்துள்ளார். அதில் அவர், "மதுரையில் அதிமுக ஒரு மாநாடு நடத்தியது. அதில் திமுகவைத் திட்டுவதுதான் ஒரே நோக்கமாக இருந்து. அந்த மாநாட்டில் போட்ட சாப்பாடு போட்டு பெரிய அளவில் காட்டினார்கள்.
இப்படி அதிமுக மாநாட்டைப் பிரம்மாண்டமாகக் காட்ட முயற்சி செய்தது. ஆனால், எங்கள் மாநாட்டின் பெயரே மாநில உரிமைகள் மீட்பு மாநாடு என்றுதான் வைத்திருக்கிறோம். அதற்கான காரணமே கடந்த 9 ஆண்டுகளில் அதிமுக நம் மாநிலத்தின் அத்தனை உரிமைகளையும் விட்டுக் கொடுத்துவிட்டது. இந்த மாநாட்டில் நீட் எதிர்ப்பு மிக முக்கிய பங்கு வகிக்கும். இந்த இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியின் சாதனைகள் பட்டியல் போட்டுப் புரிய வைக்க இருக்கிறோம். இயக்கத்தின் வரலாறு என்ன என்பதை இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.