தி.மு.க. காணாமல் போகுமா? மோடிக்கு, உதயநிதி ஸ்டாலின் காட்டமான பதில்

தி.மு.க. காணாமல் போகும் என பேசிய பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

Update: 2024-03-01 16:24 GMT

பிரதமர் மோடி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

திமுகவை அழித்துவிடுவதாக கூறுகிறார்கள். கடந்த 70 வருஷமாக இப்படி சொல்கிறவர்கள் தான் அழிந்து போய் இருக்கிறார்கள். திரு மோடி அவர்களே நீங்கள் இல்லை.. உங்கள் தாத்தா வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தில் கடந்த 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருப்பூர் பல்லடத்தில் நடைபெற்ற அண்ணாமலை பாத யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது பிரதமர் மோடி, திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார். திமுக இனி இருக்காது என்றும், தமிழகத்தில் இருந்து திமுக முற்றாக அகற்றப்படும் எனவும், இனி தேடினால் கூட திமுகவை காண முடியாது.

தமிழகத்தில் அண்ணாமலை வந்துவிட்டதால் இனி திமுக காணாமல் போகும். தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று அண்ணாமலைதான். எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் வளர்ச்சிக்கான பாதையை வகுத்தார்கள். ஆனால் தங்கள் வாரிசுகளை முன்னிலைப்படுத்துவதையே சிலர் நோக்கமாக கொண்டிருந்தார்கள்" என்று கடுமையாக பேசினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நீங்க இல்லை உங்க தாத்தா வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

புயல் மழை, வெள்ளம் வரும்போது எல்லாம் தமிழகத்திற்கு மோடி வரமாட்டார். ஆனால் தேர்தல் சமயத்தில் மட்டும் தான் பிரதமர் மோடி தமிழகம் வருவார். கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வந்தார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அடிக்கல் நாட்டினார். ஒரே ஒரு செங்கலை மட்டும் தான் நட்டு வைத்தார். அந்த செங்கலையும் நான் தூக்கிட்டு வந்துவிட்டேன். இதுவரை ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. அதற்கு பிற்கு இப்போது தான் தமிழகம் வந்திருக்கிறார் பிரதமர் மோடி.

அண்மையில் கூட வட மாநிலங்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆனால் தமிழ்நாட்டை ஒட்டு மொத்தமாக புறக்கணித்து இருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வாயை திறந்தால் சொல்றது எல்லாம் வடை தான். திமுகவை அழித்துவிடுவதாக கூறுகிறார்.

கடந்த 70 வருடமாக இப்படி சொல்கிறவர்கள் தான் அழிந்து போய் இருக்கிறார்கள். திரு மோடி அவர்களே நீங்கள் இல்லை.. உங்கள் தாத்தா வந்தாலும் இது முடியாது. திமுகவை தொட்டு கூட பார்க்க முடியாது. பிரதமர் மோடி நினைக்கிறார் 2 நாள் தமிழகம் வந்து பிரசாரம் செய்தால் வெற்றி பெற்று விடுவோம் என்று. ஆனால் அது நடக்காது. நான் சவால் விடுகிறேன். அடுத்து 40 நாட்கள் இங்கேயே தங்கி இருந்து பிரசாரம் செய்யுங்க.. உங்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. ஏனென்றால் தமிழ்நாடு மக்கள் மிக தெளிவானவர்கள். நீங்கள் ராமர் கோவில் கட்டுங்கள். மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டுங்கள். தமிழ்நாட்டு மக்கள் வந்து சாமி கும்பிடுவார்கள். சாமி கும்பிட்டு விட்டு தேர்தல் என்று வந்தால் அங்கே வாக்குச்சாவடிக்கு வந்து உதயசூரியன் சின்னத்தில் தான் ஓட்டு போடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் பதிலடி கொடுத்திருந்தார். அவர் கூறுகையில், "திமுகவை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று, தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர். திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு.

அவரது பாணியில் பாஜகவே இருக்காது என நான் சொல்ல மாட்டேன். எங்களைத் தலைவர் கருணாநிதி அப்படி வளர்க்கவில்லை. கடந்த காலத்தில் நல்ல ஆளும் கட்சியாக இருக்கத் தெரியாத பா.ஜ.க., வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாகவாவது இருக்கட்டும் என நான் வாழ்த்துகிறேன் என்று கூறியிருந்தார்.

Tags:    

Similar News