எம்.பி.தேர்தலில் தி.மு.க.வெற்றி கேள்விக்குறி: திருச்சி மூத்த தொண்டனின் குமுறல்
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி கேள்விக்குறியாகும் என திருச்சியை சேர்ந்த ஒரு மூத்த தொண்டர் ஒருவர் தனது குமுறலை வெளியிட்டு உள்ளார்.
‘நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்கும் என திருச்சியை சேர்ந்த மூத்த தொண்டர் ஒருவர் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றில் திருச்சிக்கு என தனி இடம் உண்டு. அது மட்டும் அல்ல. திருச்சி இல்லாமல் தி.மு.க. வரலாற்றை எழுத முடியாது. தி.மு.க.வின் நிறுவன தலைவர்களில் ஒருவரான முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா திருச்சி பற்றி கூறுகையில் ‘திருச்சி தீரர்கள் நிறைந்த கோட்டம்‘ என தனது தம்பிமார்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் காரணமாகத்தான் அண்ணா, தி.மு.க. தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கான மாநாட்டை திருச்சியில் தான் நடத்தினார். அதில் அதிகப்படியானவர்கள் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் தி.மு.க. தேர்தல் களத்தில் குதித்தது. இதன் காரணமாக தந்தை பெரியாருடன் அண்ணாவுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. இது தி.மு.க.வின் கடந்த கால வரலாறு. தி.மு.க.வின் முக்கிய முடிவுகள் பல திருச்சியில் தான் எடுக்கப்பட்டது உண்டு.
கருணாநிதி காலத்தில் கூட திருப்பு முனை மாநாடு திருச்சியில் தான் நடத்தப்பட்டது. நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் கூட திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் தான் வெற்றி பெற்றன. எம்.ஜி.ஆர். தமிழக முதலமைச்சராக மூன்று முறை இருந்த காலகட்டத்தில் கூட திருச்சி நகரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள் குறிப்பாக அன்பில் தர்மலிங்கம். மலர்மன்னன் போன்றவர்கள் இதில் அடங்குவர்.
இத்தகைய பெருமைக்குரிய திருச்சியில் தற்போது தி.மு.க. கட்சி நிர்வாகிகளுக்கு இடையே ஈகோ பிரச்சனை மற்றும் கோஷ்டி பூசல்கள் நடந்து வருகிறது. திருச்சியில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என இரு அமைச்சர்கள் உள்ளனர். நேரு தி.மு.க. முதன்மை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இவர்கள் இருவருமே கட்சியின் மேல் மட்டத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் இவர்களுடன் மோத முடியாமல் கட்சிக்காக ஆரம்ப காலகட்டத்தில் உழைத்த பல மூத்த நிர்வாகிகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள் என மூத்த நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
தி.மு.க.வில் சமீபத்தில் கட்சிக்கு வந்தவர்கள் இன்னோவா கார், பங்களா என பவர் ஆக சுற்றுகிறார்கள். ஆனால் பழைய தி.மு.க. நிர்வாகிகள் ஓரம் கட்டப்படுகிறார்கள். இதனை கட்சி தலைமையும் கண்டு கொள்வது இல்லை என்பது தான் இவர்களது குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுகளை பலர் வெளிப்படையாக பேசுவது இல்லை. ஒரு சிலர் மட்டும் துணிந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் திருச்சி மாவட்ட தி.மு.க.வில் இரண்டு முறை மாவட்ட துணை செயலாளர் ஆகவும், பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தவர் குடமுருட்டி சேகர். 63 வயதான இவர் திருச்சி அருகே உள்ள கம்பரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்து உள்ளார். இவர் தனது பகுதியில் ஒரு பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார்.
அண்ணா படத்துடன் கூடிய அந்த பேனரில் ‘உழைப்பவனை தேடி கண்டுபிடித்து இயக்கம் நடத்தினால்தான் பலன் உண்டு. கிடைத்தவனை கொண்டு நடத்தினால் பலன் இல்லை’ என்ற வாசகங்கள் இடம் பெற்று உள்ளது. இந்த வார்த்தைகள் அண்ணா கூறிய பொன்மொழிகள் ஆகும்.இந்த பிளக்ஸ் பேனர் திருச்சி மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது திமுக விற்காக ஆரம்ப காலகட்டத்தில் உழைத்தவர்கள் மதிக்கப்படாமல் இருக்கும் தொண்டர்களின் உணர்வுபூர்வமான வெளிப்பாடு என்றும் கூறி வருகிறார்கள்.
இது தொடர்பாக குடமுருட்டி சேகர் கூறுகையில் நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தி.மு.க.வில் தொண்டனாக, மாவட்ட நிர்வாகியாக, தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருந்து பணியாற்றி உள்ளேன். ஜெயலலிதா 2011 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது எனது கம்பரசம்பேட்டை ஊராட்சி அவரது தொகுதியில் தான் வருகிறது. அப்போது எனது ஒன்றியத்தில் நான் அவருக்கு எதிராக கடுமையாக உழைத்ததால், அவர் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்றதும் என் மீது வழக்கு போட உத்தரவிட்டார்.
இதன் காரணமாக போலீசார் என் மீது நில அபகரிப்பு வழக்கு, கஞ்சா வழக்கு என பல வழக்குகளை போட்டனர். குண்டர் சட்டத்தில் கைது செய்தும் சிறையில் அடைத்தார்கள். அந்த வழக்குகளை எனது சொத்துக்களை விற்று நடத்தி நான் வெளியே வந்தேன். ஆனால் இப்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களுக்கும் இடையே உள்ள போட்டி காரணமாக கட்சி அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
நான் வைத்துள்ள இந்த பேனர் எனது தனிப்பட்ட உள்ள குமுறல் அல்ல. திருச்சி மாவட்டத்தில் உள்ள என்னை போன்ற ஏராளமான வெளியே சொல்ல முடியாத தி. மு. க. தொண்டர்களின் மனக்குமுறல் ஆகும். கட்சியின் தலைவருக்கு இந்த விவரங்கள் தெரிவிக்கப்படுவதில்லை. எனவே கலைஞர் வழியில் கட்சி மற்றும் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு திருச்சி மாவட்ட தி.மு.க.விற்கு புத்துணர்ச்சி ஊட்ட வேண்டும். இல்லையென்றால்,இது கண்டு கொள்ளப்படவில்லை என்றால் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் தி.மு.க.வின் வெற்றியே கேள்விக்குறியாகும் என்றார்.