குஷ்புவை விமர்சித்து பேசிய தி.மு.க. பேச்சாளர் கட்சியில் இருந்து நீக்கம்

நடிகை குஷ்புவை விமர்சித்து பேசிய தி.மு.க. பேச்சாளர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2023-06-18 14:03 GMT

நடிகை குஷ்பு.

நடிகை குஷ்புவை அவதூறாக விமர்சித்து பேசிய தி.மு.க. பேச்சாளர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னையை சேர்ந்தவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவர் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் ஆவார். மாநிலம் முழுவதும் தி.மு.க. கூட்டங்களில் கட்சியின் கொள்கை மற்றும் தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் பற்றி பேசி வந்தார்.

கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழக ஆளுநர் ஆர்.என்.வி மற்றும் நடிகையும், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரும்,தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினருமான  குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். 

அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என குஷ்பு கூறி இருந்தார். இந்நிலையில் குஷ்பு குறித்து அவதூறாகப்பேசிய பேச்சாளார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தி.மு.க.விலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாகவும் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அவதூறு பேச்சுக்காக தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அவதூறு பேச்சுக்காக தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கொடுங்கையூர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

தி.மு.க.விலிருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டது குறித்து பேசிய குஷ்பு, “கட்சியில் இருந்து தி.மு.க. பேச்சாளரை நீக்கியது மகிழ்ச்சி. அதற்காக முதல்வருக்கு நன்றி. ஆனால் தவறாக பேசிய நபர் தெரிந்தே தான் பேசியுள்ளார். எனவே எனது நடவடிக்கை கண்டிப்பாக இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News