திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன?
கடந்த தேர்தலில் கோவை, மதுரையில் போட்டியிட்ட நிலையில் தற்போது கோவைக்கு பதில் திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு 10, இந்திய கம்யூனிஸ்டுக்கு 2, மதிமுகவுக்கு 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளும் ஒதுக்கி உடன்பாடு கையெழுத்தாகி விட்டது. இதையடுத்து மற்ற கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்து என்பது குறித்தான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையின் முடிவில் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் கோவை, மதுரையில் போட்டியிட்ட நிலையில் தற்போது கோவைக்கு பதில் திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.
அதேப்போல், தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனை செயலாளர் முத்தரசன் உறுதிப்படுத்தியுள்ளார்.