சென்னை, கோவை, ஈரோடு, வேலூர் மாநகராட்சிகளில் மீனாட்சி ஆட்சி : மேயருக்கு பெண்கள்..!
சென்னை, கோவை, ஈரோடு, வேலூர் உள்பட 9 மாநகராட்சிகளில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த 2019 டிசம்பரில், அ.தி.மு.க. ஆட்சியின் போது, 24 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டன. தென்காசி உள்பட 9 மாவட்டங்கள் புதிதாக உருவானதால், அந்த மாவட்டங்களில் மட்டும் அப்போது, தேர்தல் நடத்தப்படவில்லை.
பின்னர், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கடந்த அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியது.
எனினும், தரம் உயர்த்துதல், வார்டு பிரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால், தேர்தல் நடத்துவது தள்ளிப்போனது. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஜனவரி 31ம் தேதிக்குள், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டுமென்று கெடு விதித்தது.
இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு, வரும் 21-ம் தேதி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி மேயர் பதவி, பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவியும் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடி பட்டியலின பொது பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், விருதுநகர், காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய ஒன்பது மாநகாராட்சி மேயர் பதவிகளும் (பொது) பெண்களுக்கு என்று, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எஞ்சிய மாநகராட்சிகளான திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி, ஓசூர், நாகர்கோயில், கும்பகோணம் ஆகிய மாநகராட்சிகளில் வழக்கம்போல எந்த மாற்றமும் இல்லை; தற்போதைய நிலையே தொடரும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருப்பதால், தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. பரபரப்பாகியுள்ள அரசியல்களும் அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகி வருகின்றன.