அரசியல் சட்டத்தை மாற்ற சதி: மோடி மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு

அரசியல் சட்டத்தை மாற்ற சதி செய்கிறார் என்று பிரதமர் மோடி மீது சோனியா காந்தி குற்றம் சாட்டி பிரச்சாரம் செய்தார்.

Update: 2024-04-07 11:08 GMT

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி.

பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற சதி செய்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் 7 கட்டங்களாக நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், அரசியல் பரப்புரையில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில், வேலைவாய்ப்பு, பெண்கள் நலன், கல்வி, பொருளாதாரம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் கட்சி மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஏராளமான திட்டங்கள் பட்டியலிடப்பட்டன.

குறிப்பாக ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம், இளைஞர்களுக்கு ரூ.1 லட்சத்தில் வேலை வாய்ப்பு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, அரசு பணிகளில் ஒப்பந்த முறை ஒழிப்பு, மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு உள்ளிட்டவை பெரும் கவனம் பெற்றிருந்தன. இந்த தேர்தல் அறிவிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சோனியா காந்தி, “பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற சதி செய்கிறார்” என்று விமர்சித்துள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது:-

பல வருடங்களுக்கு முன்னர் நமது முன்னோர்கள் இருளிலிருந்து சுதந்திரத்திற்கான வெளிச்சத்தை தேடினார்கள். ஆனால் இன்று, சுதந்திரம் மீண்டும் இருளில் சிக்கியுள்ளது. இதை எதிர்த்து போராடி நீதியின் வெளிச்சத்தை தேடுவதே நமது தீர்மானமாக இருக்க வேண்டும். நம் நாட்டை விட பெரியவர்களாக இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புகின்றனர். ஆனால் நாட்டை விட பெரியவர் என்று இங்கு யாரும் கிடையாது. இப்படி சிந்திப்பவர்களுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுக்கிறார்கள்.

தன்னை எல்லாவற்றையும் விட பெரியவராக கருதும் பிரதமர் மோடி ஜனநாயகத்தின் கண்ணியத்தை மீறுகிறார். பாஜகவினர், எதிர்க்கட்சியினரை மிரட்டி தங்களது கட்சியில் இணைக்க பல்வேறு யுக்திகளை பயன்படுத்துகிறார்கள். இப்படியாக நமது ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. மட்டுமின்றி அரசியலமைப்பு சட்டத்தையும் மாற்றும் முயற்சிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. நாட்டின் அனைத்து அம்சங்களிலும் அச்சம் பரவி வருகிறது. இந்த சர்வாதிகார போக்குக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டும். வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி, சமத்துவமின்மை என எல்லா பிரச்னைகளையும் நாம் நாடு எதிர்கொண்டு விட்டது. எனவே எதிர்காலம் விரக்தியில் இருக்கிறது. நாட்டை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைவீர்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்  பிரியங்கா காந்தி, “இன்று நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருக்கிறது. இதனை போக்க மோடி அரசு என்ன செய்தது? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்று கூறிய பாஜக, இன்று அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் சாக்கு சொல்லி வருகிறது. அக்னிபாத் திட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் அவர்கள் இளைஞர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்கள். மறுபுறம் விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்.ஆனால் இதையெல்லாம் மோடி கண்டுகொள்ளவில்லை. இன்று நம்முடைய ஜனநாயகம் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது. காரணம், ஜனநாயகத்தை பலப்படுத்த உருவாக்கப்பட்ட மிகவும் நம்பிக்கைக்குரிய அமைப்புகள் பலவீனமடைந்துள்ளன. குறிப்பாக தேர்தல் ஆணையம் பலவீனமடைந்துள்ளது என்றார்.

Tags:    

Similar News