திமுக சொல்வதை ஏற்பது காங்கிரஸ் வேலையல்ல: காங். எம்பி பரபரப்பு பேச்சு

கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, திமுக சொல்வதை எல்லாம் ஏற்பது காங்கிரஸ் வேலையல்ல என்று, விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Update: 2022-05-24 07:00 GMT

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனை, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதை, திமுக உள்பட பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன. அதே நேரம், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, இதனால் அதிருப்தியில் உள்ளது.

பேரறிவாளன் விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் கட்சி இடையே மன வருத்தம் உள்ளது. இது, இரு கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் விவாதத்தை கிளறிவிட்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் திமுக - காங்கிரஸ் கட்சியினர் மோதிக் கொள்ளும் போக்கு உள்ளது.

இந்த நிலையில், கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், விருதுநகர் தொகுதி எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் பேச்சு, சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விருதுநகர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், நிருபர்களிடம் பேசுகையில், பிரசாந்த் கிஷோர் காசு கொடுத்தால் ஆலோசனை சொல்லும் ஆலோசகர் மட்டுமே. அவர் கூறும் ஆலோசனையை ஏற்பதா, வேண்டாமா என்பதை காசு கொடுக்கும் காங்கிரஸ் கட்சிதான் முடிவு செய்யும். பிரசாந்த் கிஷோர் வாய்க்கு வந்ததை பேசுவதை வழக்கமாக கொண்டிருப்பதாக கூறினார்.

பேரறிவாளன் விடுதலை குறித்து அவர் பேசுகையில், "பேரறிவாளனை ஒரு தியாகிபோல சித்தரித்து, அவரது விடுதலையைக் கொண்டாடுவது எவ்விதத்தில் நியாயம். பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில், திமுக கூட்டணியில் உள்ள மற்றகட்சிகள் ஒவ்வொரு நிலைப்பாடும், காங்கிரஸ் கட்சி வேறு நிலைப்பாடும் எடுத்துள்ளன. அதேபோல், திமுக சொல்வதை எல்லாம் ஏற்பது காங்கிரஸின் வேலை இல்லை" என்றார்.

மூத்த காங்கிரஸ் தலைவரான மாணிக்கம் தாகூர் பேச்சு, திமுக - காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News