தெலுங்கானாவை போல் ஆந்திராவிலும் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் காங்கிரஸ்
தெலுங்கானாவை போல் ஆந்திராவிலும் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது.
ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அவரது சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. ஆந்திரா சட்டசபை தேர்தலுக்கான 2 கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஏற்கனவே முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தும் உள்ளார். ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம் இடையேதான் போட்டி உள்ளது. இம்மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள், ஜனசேனா ஆகியவையும் களத்தில் உள்ளன.
ஆந்திராவில் காங்கிரஸ் இருக்கும் இடம் தெரியாத நிலைமையில்தான் உள்ளது. ஆந்திராவில் காங்கிரஸுக்கு உயிர் கொடுக்கும் வகையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் நடத்தி வந்த ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியையும் காங்கிரஸில் இணைத்தார்.
இந்த நிலையில் ஆந்திரா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஆந்திரா காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்படக் கூடும் என கூறப்பட்டது.
இந்த நிலையில் ஆந்திரா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளாவை நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆந்திராவின் அண்டை மாநிலமான தெலுங்கானாவல் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து உள்ளது. தெலுங்கானா பிரிவினைக்கு முன்பாக ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக இருந்த போது காங்கிரஸ் தான் அங்கு பலமான கட்சியாக இருந்தது. இடையில் என்.டி. ராமராவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்து காங்கிரசை பின்னுக்கு தள்ளியது.
அதன் பின்னர் என்.டி. ராமராவின் மருமகனான சந்திரபாபு நாயுடுவிற்கும், காங்கிரசின் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிக்கும் தான் போட்டி இருந்து வந்தது. இந்த நிலையில் தான் தற்போது ராஜசேகர ரெட்டியின் மகனும் அம்மாநில முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியை வீழ்த்த அவரது தங்கையான ஷர்மிளாவிற்கு பதவி கொடுத்து தெலுங்கானாவை போல் ஆந்திராவிலும் ஆட்சியை பிடித்து விடவேண்டும் என காய்களை நகர்த்தி வருகிறது காங்கிரஸ் கட்சி.