தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் குழு அறிவிப்பு
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் குழுவை கட்சி தலைமை அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் இப்போதே அதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கி விட்டது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மாநிலம் வாரியாக மாநில தேர்தல் ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இது ஒரு புறம் இருக்க அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைத்தல், தொகுதி உடன்பாடு, வேட்பாளர் தேர்வு போன்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா அரசை பதவி இறக்கம் செய்து விட்டு ஆட்சி கட்டிலில் ஏறி அமர்வதற்கு காங்கிரஸ் கட்சி பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. இதற்காக மாநில கட்சிகளுடன் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளது .தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் அடங்கிய தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியும் ஆட்சியை தக்க வைப்பதில் தீவிர கவனம் செலுத்தி அதற்கான ராஜதந்திர நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி முக்கிய அங்கம் வகிக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 15 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான குழுவில் 35 பேர் இடம் பிடித்துள்ளனர்.
அந்த பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ, முன்னாள் மத்திய மந்திரிகள் கே.வி. தங்கபாலு , ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன் நாச்சியப்பன், செல்லகுமார், மாணிக்கம் தாகூர், மற்றும் மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், மணி சங்கர் ஐயர், தனுஷ்கோடி ஆதித்தன், கிருஷ்ணசுவாமி, மற்றும் கே.ஆர்.ராமசாமி, விஷ்ணு பிரசாத், ஜே.எம்.ஆரூண், நாசே ராமச்சந்திரன், சிடி மெய்யப்பன், மயூரா ஜெயக்குமார், மோகன் குமார மங்கலம், ஆர்ம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ உட்பட 35 பேர் இடம் பெற்றுள்ளனர்.