'இந்தியா' கூட்டணி ஆலோசனை கூட்டம்; மும்பை செல்லும் முதல்வர் ஸ்டாலின்

மும்பையில் இன்று நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மும்பை செல்கிறார்.;

Update: 2023-08-31 03:53 GMT

முதல்வர் ஸ்டாலின் 

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் கடந்த மாதம் பெங்களூருவிலும் நடந்தது.

பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் 'இந்தியா' கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது. மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் கூட்டம் நடைபெறுகிறது.

கூட்டத்தில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்து எதிர்க்கட்சி தலைவர்கள் மும்பைக்கு படையெடுத்து வருகிறார்கள். ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் நேற்று முன்தினமே மும்பை வந்து சேர்ந்தனர்.

மேற்கு வங்க முதல்வர மம்தா பானர்ஜி நேற்று மாலை மும்பை வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் இன்று காலை 9.40 மணி விமானத்தில் சென்னையில் இருந்து மும்பை செல்கிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரும் வருகிறார்கள். இன்று மாலையில் கிராண்ட் ஹயாத் ஓட்டலில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனையில் ஈடுபட்டு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

நாளை காலையில் தலைவர்களின் முறைப்படியான கூட்டம் நடக்கிறது. 2 நாட்கள் நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் வேட்பாளர், தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களை தேர்வு செய்வது குறித்தும் முடிவு செய்யப்படுகிறது. இந்தியா கூட்டணிக்கு என உருவாக்கப்பட்ட லோகோவும் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

முதல் இரண்டு கூட்டங்களில் கட்சிகளை திரட்டி பலத்தை காட்டுவதிலேயே எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டின. ஆனால் இன்று தொடங்கும் மும்பை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முக்கிய வியூகம் வகுக்கப்பட உள்ளது. இதனால் மும்பை கூட்டம் இந்தியா கூட்டணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் அரசியல் பார்வையாளர்கள் இந்தியா கூட்டணி கூட்டத்தை கூர்ந்து கவனித்து வருகின்றனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் செய்தியாளர்களிடம் கூறுகையில், மும்பையில் நடைபெறும் கூட்டத்தில் 28 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். நாட்டில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர எதிர்க்கட்சி கூட்டணி ஒரு வலிமையான மாற்றை வழங்கும் என்று நம்புகிறேன். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பாஜக கூட்டணியுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் எந்த கூட்டணியில் இருக்கிறார் என்று தெரியவில்லை. எங்களது தேசியவாத காங்கிரசில் எந்த குழப்பமும் இல்லை. கட்சியை விட்டு விலகி சென்றவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.

காங்கிரசை சேர்ந்த மராட்டிய முன்னாள் முதல்வர அசோக் சவான் கூறுகையில், "இந்தியா கூட்டணி கூட்டத்தில் 11 மாநில முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள். 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 22 கோடி வாக்குகள் பெற்றது. ஆனால் பா.ஜனதா அல்லாத கட்சிகள் 23 கோடி வாக்குகளை பெற்றிருந்தன. எனவே நாங்கள் ஒன்று கூடியிருப்பதன் மூலம் எங்களால் வெற்றி பெற முடியும்" என்றார்.

Tags:    

Similar News