மகளிர் உரிமை தொகை 2-ம் கட்டமாக நவ 10ல் வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

மகளிர் உரிமை தொகையை இரண்டாம் கட்டமாக நவ 10ல் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.;

Update: 2023-11-08 12:28 GMT

முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக மகளிர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்படி தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைந்ததும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழக முழுவதும் வலுத்தது/

இதன் காரணமாக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடியை 70 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தது. ஆனால் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்பட்டது. தகுதியின் அடிப்படையில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுவதாக விளக்கம் கூறப்பட்டது.

இந்த நிலையில் விடுபட்டவர்கள் மகளிர் உரிமை தொகை கேட்டு அந்தந்த பகுதியில் உள்ள வருவாய் கோட்டாட்சியரிடம் மேல் முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் 11 லட்சத்து 85 ஆயிரம் பெண்கள் தங்களுக்கு மகளிர் உரிமை தொகையை வழங்க வேண்டும் என கேட்டு உரிய ஆதாரங்களுடன் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் அதிகாரிகளின் பரிசீலனை முடிந்து தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவது  பற்றிய குறுஞ்செய்தி அவர்களது செல்போன் எண்ணிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்ட திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மகளிர் உரிமை தொகை கேட்டு மேல்முறையீடு செய்த பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அதுவும் தீபாவளிக்கு முன்னதாக கிடைக்கும் என்ற  நம்பிக்கையால் இனிக்கும் செய்தியாகவும் அமைந்து உள்ளது.

Tags:    

Similar News