விடியலுக்கு வித்திட்ட இடத்தில் பிரச்சாரத்தை துவக்கும் முதல்வர் ஸ்டாலின்

விடியலுக்கு வித்திட்ட இடத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை துவக்குகிறார்.

Update: 2024-03-19 11:34 GMT

கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது திருச்சி சிறுகனூர் திமுக மாநாட்டில் ஸ்டாலின் நடந்து வந்த காட்சி (கோப்பு படம்)

தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் சென்டிமென்ட் ஆக விடியல் தந்த இடத்தில் இருந்து நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை துவங்குகிறார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில்  இந்தியா கூட்டணியும், அதிமுக தலைமையில் இன்னொரு கூட்டணியும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனி அணி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலை பொறுத்தவரை வழக்கம் போல திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வேட்பாளர்களை இறுதி செய்து விட்டன .திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கும் தகுதி எல்லாம் ஒதுக்கி கொடுத்து விட்டது. அதேபோல அதிமுகவும் கூட்டணியை இறுதி செய்யவில்லை என்றாலும் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்துவிட்டு வெளியிடாமல் வைத்துள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை 20 ஆம் தேதி தொடங்குகிறது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது பிரச்சாரத்தை  தொடங்க இருக்கிறார்கள்.


இதில் முக்கிய அரசியல் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் தங்களது பிரச்சாரத்தை இந்த நாடாளுமன்ற தேர்தலில் தொடங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவரும் முதல்வருமான மு க ஸ்டாலின் வருகிற 22ஆம் தேதி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

அதே போல அ.தி.மு.க. பொது செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 24-ஆம் தேதி திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு அருகே உள்ள வண்ணாங்கோவில் என்ற இடத்தில் தனது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அந்த வகையில் இரு கட்சிகளின் தேர்தல் பிரச்சார துவக்க களமாக திருச்சி மாறி உள்ளது.

இது ஒரு புறம் இருக்க திருச்சியை தேர்தல் பிரச்சாரத்தின் துவக்க களமாக மு க ஸ்டாலின் தேர்ந்தெடுத்தது ஏன் என்பது பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளது.

அது வருமாறு:-

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது திமுக மாநில மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் தான் பொதுக்கூட்ட வடிவில் நடைபெற்றது. அந்த மாநாட்டை மிகவும் ஹைடெக் ஆக திமுகவிற்கு தேர்தல் பிரச்சார வியூகம் வகுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர் அப்போது நடத்தி காட்டினார்.


அந்த மாநாட்டில்  வைக்கப்பட்ட முழக்கமே ‘ஸ்டாலின் தான் வர்றாறு. விடியல் தரப்போறாரு’ என்பதாகும் இதை மையப்படுத்தியே திமுகவின் பிரச்சார  பாடல்கள் எல்லாம் இடம்பெற்றன. அது மிகப்பெரிய வெற்றியை தேர்தலில் திமுகவிற்கு பெற்றுக் கொடுத்தது. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார்.

அந்த வகையில் திருச்சி மாவட்டம் சிறுகனூர் திமுக  வெற்றி பெறுவதற்கான செண்டிமெண்ட் ஸ்பாட் ஆக கருதப்படுகிறது. திமுகவை பொறுத்தவரை கடந்த பல தேர்தல்களிலும் திருச்சியில் மாநாடு நடத்தி தான் வெற்றி வாகை சூடி உள்ளார்கள்.  1996  மற்றும் 2006தேர்தல்களை இதற்கு உதாரணமாக கூறலாம். அந்த வகையில் திருச்சி ஒரு செண்டிமெண்டாக கருதப்படுவதால் தான் திருச்சியில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தையும் முதல்வர் ஸ்டாலின் துவங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News