முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் நடந்த விழாவில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னையில் நடந்த விழாவில் முன்னாள் இந்திய பிரதமர் வி. பி. சிங் சிலையை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி. பி. சிங்கிற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 52 லட்சம் மதிப்பீட்டில் சிலை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த சிலை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று வி.பி.சிங்கின் சிலையை திறந்து வைத்தார். இந்த விழாவில் உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் வி.பி.சிங்கின் மனைவி சீதா குமாரி, மகன்கள் அஜய்சிங் மற்றும் அபய் சிங் உள்பட அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
சிலை திறப்பு விழா நடந்த பின்னர் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வி.பி.சிங் பற்றி புகழுரை ஆற்றினார். அப்போது அவர் குறிப்பிடுகையில் இந்தியா முழுவதும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் பயன் அடைவதற்காக 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் வி.பி.சிங். எவ்வளவோ எதிர்ப்புகள் வந்தாலும் அதைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல் ஆட்சியே போனாலும் கவலைப்பட மாட்டேன் என கூறி மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தி 27% இட ஒதுக்கீடு வழங்கினார் விபி சிங். வி.பி.சிங் தனது வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காக போராடினார். அவர் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் என்றும் அணையாது. அவரை யார் மறந்தாலும் தமிழகம் மறக்காது. திராவிட மாடல் அரசு மறக்காது. அவர் ஏற்றி வைத்த சமூக நீதி தீபம் அணையாமல் பாதுகாக்க நாங்கள் சபதம் எடுப்போம் என்றார்.