"கேரளா கவர்னரை திரும்பப் பெற வேண்டும்" முதல்-மந்திரி பினராயி விஜயன் பேட்டி

Kerala CM Pinarayi Vijayan -கேரளா கவர்னரை திரும்பப் பெற ஜனாதிபதியை சந்தித்து வலியுறுத்துவோம் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார்.

Update: 2022-10-26 11:18 GMT

Kerala CM Pinarayi Vijayan -கேரளாவில் கவர்னர் ஆரிப் முகமதுகானுக்கும்,ஆட்சியில்  இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.கவர்னர்  ஆட்சி அதிகாரத்தில் தலையிடுகிறார் என்று முதல் மந்திரி பினராயி விஜயன் குற்றம்சாட்டி வருகிறார்.கேரள அரசு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தும், மதுபானத்தை விற்பனை செய்தும் மக்கள் பணத்தை சுரண்டுகிறது என்று சமீபத்தில் கவர்னர் காரசாரமாக பேசினார்.இதற்கு ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக அவர்களுக்குள் மோதல் நடந்து வருகிறது.

திருவனந்தபுரத்தில் உள்ள 'ஏபிஜே அப்துல் கலாம்' தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தர்  நியமனம்  தொடர்பான வழக்கில்  இந்த நியமனம் விதிகளை மீறி இருக்கிறது என்று கோர்ட்டு இந்த நியமனத்தை ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து  இந்த பிரச்சனையை கவர்னர் கையில் எடுத்துள்ளார். கேரளாவில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கவர்னர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.கவர்னரின் இந்த உத்தரவு கேரளா அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதற்கிடையே தற்போது மேலும் 2 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் பதவியை ராஜினாமா செய்ய கவர்னர்  நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த நிலையில் 11 துணை வேந்தர்களும் கவர்னரின் உத்தரவை ஏற்று  ராஜினாமா செய்ய மறுத்து விட்டனர். இதனால் தனது உத்தரவு குறித்து  வரும் 3ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கவர்னர் மீண்டும் துணை வேந்தர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த மோதல் கேரளாவில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த பிரச்சனையில் கவர்னருக்கு ஆதரவாக கேரளா பா.ஜ.க.வினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதனால் இது அரசியல் மோதலாக மாறிவிட்டது.

இந்த பிரச்சனை குறித்து கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன்  நிருபர்களிடம் கூறியதாவது:-  கவர்னருக்கான பணிகளை விட்டுவிட்டு மற்ற அனைத்து வேலைகளிலும் கவர்னர் ஆரிப் முகமது கான் ஈடுபட்டு வருகிறார். தனக்கு இல்லாத அதிகாரங்களை எல்லாம் இருப்பது போல் கற்பனை செய்து கொண்டு சர்வாதிகாரி போல் கவர்னர் செயல்படுகிறார். அவருடைய செல்பாடு கேரளாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில்  உள்ளது தெளிவாக தெரிகிறது. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சொல்படி கவர்னர் நடக்கிறார். கேரளா அரசுக்கும்  மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் எதிராக அவர் செயல்படுகிறார். அதனால் கவர்னர் பதவியில் இருந்து ஆரிப் முகமது கானை திரும்பப் பெற வேண்டும். இதை  ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம். அதோடு  பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து கவர்னரை நீக்குவது பற்றியும்  ஆலோசித்து முடிவு எடுப்போம் என்று பினராயி விஜயன் கூறினார்.

மோதல் அதிகரித்துள்ள நிலையில், கேரளா  அரசை கலைக்க பிரதமர் தயாராக இருக்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த கருத்தை தெரிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News