ரூ.4 கோடி பணம் பறிமுதல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு

ரூ.4 கோடி பணம் பறிமுதல் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு பேட்டி அளித்துள்ளார்.

Update: 2024-04-08 12:22 GMT

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு.

தாம்பரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி நெல்லைக்கு எடுத்துச் செல்ல முயன்ற ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் தேர்தல் சிறப்புக்குழு விசாரணை நடத்தும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே பரப்புரைகள் சூடுபிடித்து வருகின்றன. பாஜகவை பொறுத்த அளவில், 19 இடங்களிலும், பாமக 10, தமாகா 3, அமமுக 2, ஓபிஎஸ், தேவநாதன், ஜான்பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோர் தலா ஒரு இடங்களிலும் போட்டியிடுகின்றனர். இதில் ஓபிஎஸ் தனி சின்னத்திலும், தேவநாதன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோர் தாமரை சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

பாஜக சார்பில் அண்ணாமலை கோவையிலும், தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், நீலகிரி (தனி) எல்.முருகன், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், மத்திய சென்னையில் வினோஜ் பி.செல்வம், வேலூரில் ஏ.சி.சண்முகம், கிருஷ்ணகிரியில் சி.நரசிம்மன், பெரம்பலூரில் டி.ஆர்.பாரிவேந்தரும் போட்டியிடுகின்றனர். அதேபோல திருவள்ளூரில் பொன்.வி.பாலகணபதி, வட சென்னையில் ஆர்.சி.பால்கனகராஜ், திருவண்ணாமலையில் ஏ.அஸ்வத்தாமன், நாமக்கல்லில் கே.பி.ராமலிங்கம், திருப்பூரில் ஏ.பி.முருகானந்தம், பொள்ளாச்சியில் கே.வசந்தராஜன், கரூரில் வி.வி.செந்தில்நாதன், சிதம்பரம் (தனி) பி.கார்த்தியாயினி, நாகப்பட்டினம் (தனி) எஸ்.ஜி.எம்.ரமேஷ், தஞ்சாவூரில் எம்.முருகானந்தம், சிவகங்கையில் தேவநாதன், மதுரையில் பேராசிரியர் ராம சீனிவாசன், விருதுநகரில் நடிகை ராதிகா சரத்குமார், தென்காசி (தனி) பி.ஜான் பாண்டியன், புதுச்சேரி தொகுதியில் ஏ.நமச்சிவாயம் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

இதில் நெல்லை வேட்பாளராக களமிறங்கியுள்ள நயினார் நாகேந்திரனுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அதாவது, நேற்று தாம்பரம் ரயில் நிலையத்தில் பெரிய பெரிய பேக்குகளுடன் நெல்லை செல்ல முயன்ற இரண்டு பேரை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி உடனடியாக சோதனை மேற்கொண்டனர். இதில், இவர்களிடமிருந்து ரூ.4 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் தொடர்புடைய இடங்களில் அதிரடி ரெய்டு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மட்டுமல்லாது ரூ.4 கோடி எங்கிருந்து வந்தது? யாருக்காக எடுத்துச் செல்லப்பட்டது என அனைத்தையும் விரிவாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதாவது, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு தேர்தல் செலவினப் பார்வையாளர் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்திருந்த கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, "ரூ.4 கோடி பறிமுதலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையின் அடிப்படை தேவை சாலைதானே தவிர, மைதானம் இல்லை. மைதானம் கட்டும் பணத்தில் அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்து கொடுக்கலாம். கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்ற பார்க்கிறார் முதலமைச்சர்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News