டெல்லியில் திறக்கப்பட உள்ள அண்ணா அறிவாலயம் இன்சார்ஜ் யார்?
டெல்லி அறிவாலயம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட உள்ள நிலையில் அதன் பொறுப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது
டெல்லியில் தீன் தயால் உபாத்யாயா மார்க் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் இருக்குது. அந்த கட்சி அலுவலகத்திற்கு அருகிலேயே திமுகவிற்கும் இடம் ஒதுக்கப்பட்டிருக்குது. இதில் அறிவாலயம் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின்,பிரதமர் மோடியை சந்தித்து தமிழக நல திட்டங்கள் தொடர்பாக மனு அளிச்சார்.
அப்போது டெல்லி அறிவாலய கட்டிடம் கட்டும் பணியை பார்வையிட்டு பணியை துரிதபடுத்துமாறு கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து ஜூலை மாதம் டெல்லி சென்ற முதலமைச்சர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்தை திறந்து வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அப்போதும் தீன் தயால் உபாத்யாயா மார்க் பகுதியில் கட்டப்பட்டு வரும் டெல்லி அறிவாலயத்தை பார்வையிட்டார்.
அப்போது பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வருகிற 2 ஆம் தேதி டெல்லி அறிவாலய கட்டிடம் திறக்கப்படவுள்ளது. 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 மாடி கட்டிடங்களை கொண்ட டெல்லி அண்ணா அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி பெயரில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏராளமான நூல்களை வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி அறிவாலய நிர்வாகி யார்?
இந்த டெல்லி அண்ணா அறிவாலய கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி பொறுப்பு தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மற்றும் கம்யூனிஸ் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அப்போது அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டெல்லி அறிவாலயம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பொறுப்பாளர் யார் என்ற கேள்வியானது எழுந்துள்ளது. தற்போது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திமுக சார்பாக உறுப்பினர்களாக உள்ள கனிமொழி,ஆ.ராசா, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆ.ராசா பெயரே முன்னிலையில் இருப்பதாக தகவல் வருது.