இளையராஜா மீது விமர்சனம்: திக வீரமணி, ஈவிகேஎஸ் மீது வழக்கு பதிய உத்தரவு
இளையராஜா குறித்து விமர்சனம் செய்த விவகாரத்தில்,கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு, சென்னை காவல்துறைக்கு தேசிய எஸ்.டி/எஸ்.சி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.;
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, அண்மையில் பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். இதற்கு கலவையான விமர்சனங்கள், சமூக வலைதளங்களில் எழுந்தன.
இருபுறம் இருக்க, ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், 'உணவுக்கு வழியில்லாமல் இருந்த நிலையில் கம்யூனிஸம் பேசிவிட்டு பணமும் புகழும் வந்தவுடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறீர்களே...' என்று, இளையராஜாவை விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்டோர் இருந்தனர். வீரமணியும் இளையராஜா குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இளையராஜாவை விமர்சனம் செய்து பேசிய விவகாரம் தொடர்பாக, தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் தானாக புகார் பதிவு செய்து விசாரித்தது.
அத்துடன், வீரமணி மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னை காவல் ஆணையர், சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.