ஒடிசாவை போன்று கேரளாவிலும் ஆட்சி அமைக்க திட்டம் போடும் பா.ஜ.க.

ஒடிசாவை போன்று கேரளாவிலும் ஆட்சி அமைக்க பா.ஜ.க. திட்டம் போட்டு வருகிறது,

Update: 2024-06-30 11:00 GMT

கேரளாவில் பெற்ற முதல் வெற்றியின் மூலம் மத்திய அமைச்சரான நடிகர் சுரேஷ் கோபி.

கேரளா சட்டசபைத் தேர்தலில் பாஜக 60 தொகுதிகளைக் கைப்பற்ற வியூகம் அமைத்துள்ளது. 70 தொகுதிகளைப் பெற்றால் தனிப் பெரும்பான்மையைப் பெற்றுவிட முடியும் என்ற நிலையில், இந்த பிக் டீலில் பாஜக இறங்கியுள்ளது.

நடைபெற்று முடிந்த 2024 லோக்சபா தேர்தலில் பாஜக கேரளாவில் முதல் கணக்கை தொடங்கி இருப்பதன் மூலம் தென் இந்தியாவில் அந்தக் கட்சி வளரவே இல்லை என்ற கருத்தை உடைத்தெறிந்துள்ளது. திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி 412338 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதாவது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுனில்குமாரை விட கூடுதலாக 74686 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

இதன் மூலம் முதன்முறையாகக் கேரளாவில் பாஜக லோக்சபா தேர்தலில் வெற்றியைப் பதிவு செய்திருந்தது. எனவே சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது. அதாவது இந்தப் பொதுத்தேர்தலில் பாஜக 16.68% வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகள் கேரள பாஜகவை உற்சாகத்தில் தள்ளியுள்ளது. அக்கட்சி இன்னும் 2 ஆண்டுகளில் வரப் போகின்ற சட்டசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராகி வருகிறது. 2024 பொதுத் தேர்தலில் பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் 35,000 முதல் 75,000 வரையிலான வாக்குகள் பெற்றுள்ளது. அப்படிப் பார்த்தால் கேரள மாநிலத்தில் மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கிடைத்துள்ள இந்த வாக்கு எண்ணிக்கையை வைத்து பாஜக டார்கெட் ஒன்று வகுத்துள்ளது. கிட்டத்தட்ட 60 சட்டசபை தொகுதிகளில் கவனம் செலுத்தினால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

நேற்று நடைபெற்ற மாநில பாஜக தலைமைக் கூட்டத்தில் வரப்போகின்ற சட்டசபைத் தேர்தலுக்கான முதற்கட்டத் திட்டங்கள் என்ன என்பது குறித்து அக்கட்சி விவாதித்தது. இந்தப் பொதுத் தேர்தலில் தலித், பழங்குடி மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் மத்தியில் பெரிய அளவில் பாஜக செல்வாக்குப் பெற்றுள்ளது எனத் தெரியவந்துள்ளது. காங்கிரஸ், சிபிஎம் இந்த இரண்டு கட்சிகளின் பாரம்பரிய வாக்கு வங்கியை பாஜக வளர்ந்து வருகிறது என்பதை அக்கட்சி உணரத் தொடங்கியுள்ளது.

எனவே, திட்டமிட்டு இன்னும் கூடுதலாகக் கவனத்தைச் செலுத்தினால் சட்டசபைத் தேர்தலில் 60 தொகுதிகளை மிக எளிதாகக் கைப்பற்றிவிடலாம் என்றும் மாநிலத் தலைமை தேசிய தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. நேற்றைய கட்சி கலந்தாய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் பலம் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

"இந்து சமூகத்தினரும், கிறிஸ்தவர்களும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். ஆகவே வாக்கு வங்கி அரசியலிலிருந்து இந்த மக்கள் வளர்ச்சி அரசியல் நோக்கி மனம் மாறியுள்ளனர். அதுவே உண்மை" என்றும் சுரேந்திரன் கூறியுள்ளார். தேர்தலைக் கருத்தில் கொண்டு உள்ளாட்சி வார்டுகளை எல்லை நிர்ணயம் செய்ய ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டிய பாஜக மாநிலத் தலைவர், எல்லை நிர்ணயம் குறித்து ஆளும் முன்னணி விவாதித்தபோது,​​எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் வாயை மூடிக் கொண்டு மௌனமாக உட்கார்ந்திருந்தனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

கேரள மாநிலம் முழுவதும், என்.டி.ஏ கூட்டணியின் வாக்கு சதவீதம் 19.21% ஆக உயர்ந்துள்ளது. இது 2019இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 3.57 சதவீதம் இது அதிகமாகும். 2019 மக்களவைத் தேர்தலில், திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் உள்ள நேமம் சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே பாஜக முதல் இடத்தைப் பிடித்தது. காசர்கோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஏழு சட்டசபை தொகுதிகளில் பாஜக இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது. காசர்கோடு, மஞ்சேஷ்வர் ஆகிய இரண்டில் மட்டும். கேரளாவில் உள்ள மொத்தம் 140 சட்டமன்றத் தொகுதிகளில் 30 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணி ஒரு முக்கோண போட்டிக்கு முன்பே பாஜக களம் அமைத்துள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அதை 60 தொகுதிகளுக்கு விரிவுபடுத்த உள்ளது. 70 சீட்டுகளைப் பெற்றால், அது தனிப் பெரும்பான்மை வழிவகுக்கும். அதில் பாஜக மட்டும் 60 சீட்டுக்கு இலக்கை வைத்துள்ளதால், ஆளும் கட்சிக்கு அது நெருக்கடியாக மாறும் என்று சொல்லப்படுகிறது. ஆக, ஒடிசாவை அடுத்து பாஜகவின் கண்கள் கேரளாவின் மீது விழுந்துள்ளது. முன்பே காங்கிரஸ் கட்சியின் பார்வை கேரளாவின் மீது விழுந்துவிட்டது. அதற்காகவே ராகுல் வயநாடு வந்தார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸைக் குறிவைத்து பாஜக வேலை பார்க்க தொடங்கியுள்ளது.

Tags:    

Similar News