பாஜகவுக்கு ஆதரவாக இனி தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது: குஷ்பு அவசர கடிதம்!

பாஜகவுக்கு ஆதரவாக இனி தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது என நடிகை குஷ்பு கடிதம் எழுதி உள்ளது பரப்பரை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-04-07 10:34 GMT

குஷ்பூ.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு திமுக, அதிமுக கட்சிகளுக்கு போட்டியாக பாஜகவும் தனியாக கூட்டணிகளை அமைத்து போட்டியிடுகிறது.

கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தென் சென்னை தொகுதியில் தமிழிசை சவுந்தராஜன், மத்திய சென்னை தொகுதியில் வினோஜ் பி செல்வம், வட சென்னை தொகுதியில் வழக்கறிஞர் பால் கனகராஜ், திருவள்ளூர் தொகுதியில் பொன்.பாலகணபதி, திருப்பூர் தொகுதியில் ஏபி முருகானந்தம், நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன், சிதம்பரம் தொகுதியில் கார்த்தியாயினி, நீலகிரி தொகுதியில் எல்.முருகன், நாமக்கல் தொகுதியில் கேபி.ராமலிங்கம், கிருஷ்ணகிரியில் நரசிம்மன் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். பாஜகவிற்கு நடிகை தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.

தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை களம் சூடு பிடித்துள்ள நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முடியாது என நடிகை குஷ்பு அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், நன்றியுணர்வு நிரம்பிய இதயத்துடனும், சோகத்துடனும் நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். வாழ்க்கை, நமக்குத் தெரிந்தபடி, கணிக்க முடியாதது. சில சமயங்களில், நாம் சிறந்த நிலையில் இருப்பதாக உணரும்போது, ​​அது நமது சகிப்புத்தன்மையின் வரம்புகளை சோதிக்கும் சோதனைகளை நமக்கு அளிக்கிறது. நானும் அப்படிப்பட்ட நிலையில் தான் இருக்கிறேன்.

2019 ஆம் ஆண்டு டெல்லியில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தைத் தொடர்ந்து, எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த காயம் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னைத் துன்புறுத்துகிறது, தொடர்ந்து சிகிச்சை அளித்தாலும் குணமடையவில்லை. பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று எனது மருத்துவக் குழு எனக்குக் கண்டிப்பாக அறிவுறுத்தியது, அது எனது நிலையை மேலும் மோசமடையச் செய்யும் என கூறினர்

அர்ப்பணிப்புள்ள காரியகர்த்தா மற்றும் நமது பிரதமர் மோடிஜியின் சீடர் என்ற முறையில், உண்மையான அர்ப்பணிப்புள்ள பாஜகவின் போர்வீரன் என்ற முறையில் எனது மருத்துவரின் அறிவுரைக்கு எதிராக, வலியும் வேதனையும் இருந்தபோதிலும், என்னால் முடிந்தவரை உழைத்து பிரச்சாரம் செய்து வந்தேன். எதிர்பார்த்தபடியே உடல்நிலை மோசமடைந்தது.

இதனால் தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் நான் தீவிரமாக பங்கேற்பதற்கு இடையூறாக இருக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் என்னால் முடிந்த பங்களிப்பை செய்ய முடியவில்லை என்ற நினைப்பு ஆழ்ந்த மனவருத்தத்தை அளிக்கிறது. இருப்பினும், எனது சமூக வலைதளம் மூலம் பாஜகவின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதன் மூலம் நான் தொடர்ந்து ஆதரவளிப்பேன் மற்றும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பேன்.

உங்கள் ஊக்கம் என் ஆர்வத்தை தூண்டியது. மேலும் வலுவாக மீண்டு வருவதற்கான எனது நம்பிக்கையை பலப்படுத்துகிறது. நமது பிரதமர் தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்பதை காண எங்கிருந்தாலும் உரத்த குரலில் ஆரவாரம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News