பா.ஜ.க. ஐ.டி.விங் தலைவர் ராஜினாமா: அ.தி.மு.க.வில் ஐக்கியமானார்
பா.ஜ.க. ஐ.டி.விங் தலைவர் நிர்மல் குமார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி உள்ளார்.
பா.ஜ.க. ஐ. டி. விங் தலைவர் நிர்மல்குமார் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு (ஐ. டி.விங்) தலைவராக பணியாற்றி வந்தவர் சி.டி.ஆர். நிர்மல் குமார். இவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பா.ஜ.கட்சியில் இருந்து விலகுவதாக கூறி உள்ளார். என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பயணித்தேன். உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம். விடைபெறுகிறேன். என்னுடன் பயணித்தவர்களுக்கு நன்றி என அதில் குறிப்பிட்டு உள்ளார்.
அதன் பின்னர் அவர் தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பூங்கொத்து அளித்து தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
இது தொடர்பாக நிர்மல் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தமிழக பா.ஜ.க. தலைமை தொண்டர்களையும் கட்சியையும் சிறப்பாக பயன்படுத்தி கட்சியைப் பற்றி சிந்திக்காது சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதைப் போன்ற அற்பத்தனம் எதுவும் இல்லை. அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் வியாபாரம் ஆக்கி இடத்திற்கு ஏற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். தொண்டர்களை மதிக்காது தான் தோன்றித்தனமாக செயல்படும் நபாரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது. 2019-ல் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20சதவீதம் கூட இல்லை. அதைப் பற்றி துளியும் கவலையில்லாமல் மாய உலகத்தை சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது.
அதை உணர்த்த முயன்று என்னைப் போன்ற பலர் தோல்வியுற்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீரா வேசமாக பேசிவிட்டு திரைமறையில் பேரம் பேசும் நபரிடம் எப்படி பயணிக்க முடியும். மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களையே மிஞ்சும் அளவிற்கு இருக்கும் நபரால் தமிழக பா.ஜ.க.விற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே மிகப்பெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்? என கூறியுள்ளார்.
நிர்மல் குமார் தனது அறிக்கையில் கட்சி தலைவரான அண்ணாமலையை பற்றி கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகி இருப்பதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் கட்சியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது பா.ஜ.க. ஐ. டி. விங் தலைவர் நிர்மல்குமாரும் விலகி உள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பா.ஜ.க.ஐ. டி.விங் தலைவர் தனது கட்சியில் இருந்து விலகி கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வில் இணைந்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.