பம்பரம் சின்னத்தில் தான் போட்டி: கறார் காட்டும் ம.தி.மு.க.

பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று பேச்சுவார்த்தையின்போது ம.தி.மு.க. கறார் காட்டி உள்ளது.

Update: 2024-02-29 14:48 GMT

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என மதிமுக அவை தலைவர் அர்ஜுன் ராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது.

அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்திய முஸ்லீம் லீக், மதிமுக, கொங்கு மக்கள் தேசிய கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இதில் ராமநாதபுரம் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும் நாமக்கல் தொகுதி கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டும் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தின.

அதில் உடன்பாடு எட்டப்பட்டு இரு கட்சிகளுக்கும் தலா இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆனால் எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் முடிவு செய்யப்படும். இந்த நிலையில் மதிமுகவும் இரு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில் இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன் ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஒரு மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்டுள்ளோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

நாங்கள் எங்கள் சின்னமான பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம். திமுக நிர்பந்தித்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடமாட்டோம் என்றார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை பம்பரம் சின்னத்தில் போட்டியிட மதிமுக கோரி வரும் நிலையில் அதை திமுக ஏற்குமா இல்லை நிராகரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News