அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி: அதிமுக முன்னாள் அமைச்சர் பேச்சு

அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என திருச்சியை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி பரபரப்பாக பேசினார்.

Update: 2024-08-27 12:15 GMT

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என அதிமுக முன்னாள் அமைச்சர்  பரஞ்ஜோதி காட்டமாக பேசினார்.

தமிழக அரசியலில் அவ்வப்போது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசிக் கொள்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலைக்கும் இடையே கடும் வார்த்தை போட்டி ஏற்பட்டுள்ளது.


இதற்கு காரணம் பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் பேசிய அண்ணாமலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒருமையில் பேசி அவர் ஒரு  தற்குறி என பேசியது தான். இந்த பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமியும் பதில் அளித்து விட்டார். அதனை தொடர்ந்து தற்போது அதிமுக கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் அண்ணாமலையை பிடி  பிடி என்று பிடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அந்த நல்லூர் ஒன்றிய பகுதியில் அதிமுக  உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது .இந்த நிகழ்வில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்சோதி அண்ணாமலையை கடுமையாக தாக்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை 1984 ஆம் ஆண்டு பிறந்தவர். அவருக்கு இப்போது 40 வயது தான் ஆகிறது . அரசியலுக்கு வந்து மூன்றாண்டுகள் தான் முடிந்துள்ளது. அவர் இரண்டு கோடி தொண்டர்களை கொண்ட மிகப் பெரிய இயக்கத்தின் தலைவர் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றுக்கு சொந்தமான நமது கழகத்தின் காவல் தெய்வம்,  தாய் போன்று உள்ள கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களை தற்குறி என்று விமர்சனம் செய்து உள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்வதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை. கிராமங்களில் சொல்வார்கள் முளைத்து மூன்று இலை கூட விடவில்லை, அதற்குள் இவ்வளவு ஆர்ப்பாட்டமா?  என்று. அப்படித்தான் நான் கருதுகிறேன் .அரசியலுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆன அண்ணாமலை நமது பொதுச் செயலாளரை பார்த்து வசை பாடி இருக்கிறார். 2026 ஆம் ஆண்டு அதிமுக நான்காவது இடத்திற்கு தள்ளப்படும் என்று கூறி இருக்கிறார்.

கழகத்தின் 2 கோடி தொண்டர்களும் எடப்பாடியார் அவர்களை முதலமைச்சர் ஆக்குவதற்கு இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறோம். இது அவருக்கு தெரியாது.  அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சியில் அமரும். நமது பொதுச்செயலாளர் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவார். இது நடக்க போகும் நிகழ்வு. 

அண்ணாமலை நான் பச்சை மையில் கையெழுத்து போட்டவன் என்கிறார். நீ பச்சை மையில் எத்தனை கையெழுத்து போட்டு இருப்பாய்? எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் ஒரு சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக ,வாரிய தலைவராக, அமைச்சராக, நான்கரை ஆண்டு காலம் முதலமைச்சராக எத்தனையோ பச்சை இங்கில் கையெழுத்து போட்டு இருக்கிறார். இது தெரியுமா உனக்கு?

காவல்துறையில் நான் ஐபிஎஸ் என்று சொல்கிறார். இவர் எல்லாம் எப்படி ஐபிஎஸ் ஆனார் என்று தெரியவில்லை. காவல்துறையை பொறுத்தவரை கடைநிலை பதவி என்பது கான்ஸ்டபிள் .அந்த கான்ஸ்டபிள் பதவிக்கு கூட அண்ணாமலை தகுதியானவர் அல்ல. இவர் எல்லாம் நமது பொதுச் செயலாளர் பற்றி விமர்சனம் செய்வதற்கு என்ன தகுதி இருக்கிறது? அண்ணாமலை தேர்தலுக்கு முன்பாக பாதயாத்திரை நடத்தினார். அதற்கு பெயர் பாதயாத்திரை அல்ல. வசூல் யாத்திரை. அவர் சென்ற இடங்களில் எல்லாம் அந்த பகுதியில் உள்ள தொழிலதிபர்களிடம் வசூல் வேட்டை நடத்தினார். இதுதான் அண்ணாமலையின் கடந்த கால வரலாறு. 

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News