யாருடன் கூட்டணி? அ.தி.மு.க.வா, பா.ஜ.க.வா நாளைய பொதுக்குழுவில் பா.ம.க. முடிவு

அ.தி.மு.க.வா, பா.ஜ.க.வா? யாருடன் கூட்டணி என்பதை நாளைய பொதுக்குழுவில் பா.ம.க. முடிவு செய்கிறது.

Update: 2024-01-31 14:14 GMT

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது. எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என்பது பொதுக்குழுவில் ஆலோசித்த பிறகே முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 லோக்சபா தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுகவிற்கு பெரும் தோல்வியே பரிசாக கிடைத்தது. இதனையடுத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் தமிழகத்தில் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என உணர்ந்த அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. இதனையடுத்து வலிமையான கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. பாமக, தேமுதிக, த.மா.கா உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைக்க அ.தி.மு.க. வியூகம் வகுத்துள்ளது.

இதே போல என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதால் பாஜக தலைமையும் பா.ம.க, தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு அடுத்ததாக உள்ள பாட்டாளி மக்கள் கட்சியும், தே.மு.தி.க.வும், இதுவரை லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வுடன், அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. தங்கள் விருப்பப்படும் தொகுதிகள் எது.? எதிர்பார்ப்புகள் என்ன என அதிமுக தரப்பில் பாமகவிடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி, லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்தக் கட்சியுடனும் இன்னும் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கில் நாளை பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது. லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என்பது பொதுக்குழுவில் ஆலோசித்த பிறகே முடிவு செய்யப்படும் என்றும் பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்தியில் பா.ஜ..க கூட்டணியில் நீடிப்பதாக அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டிருந்த நிலையில், பா.ஜ.க. கூட்டணியை பா.ம.க. தொடருமா? அல்லது தமிழ்நாட்டில் எந்த கட்சியுடன் கூட்டணி என அறிவிக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News