சட்டப்பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளியேற்றம்!

தமிழக சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

Update: 2024-06-26 04:30 GMT

தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

இன்று காலை 9.30 மணிக்கு சட்டப் பேரவை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 8 நிமிடங்களாக அவையை நடத்த விடாமல் செய்தனர் அதிமுகவினர்.

கள்ளக்குறிச்சி பிரச்னை தொடர்பாக குரல் எழுப்பிய அவர்கள், சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து கொண்டனர். இதனால் அவை நடத்தமுடியாமல் பிரச்சனை ஆனது. தொடர்ந்து கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்ததால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 22ம் தேதி துவங்கியது. முதலில் மானியக் கோரிக்கைக்கான விவாதம் தற்போது வரை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் தொடர்பாக அவை விவாதிக்க வேண்டும் என்று கூறி அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். அதற்கு பதில் அளிக்கும் வகையில், சபாநாயகர் அப்பாவு, கேள்வி நேரம் முடிந்த பிறகு, சுழிய நேரத்தில் இது குறித்து விவாதிக்கலாம் என கூறினார். மேலும் இதுகுறித்து பேசிய அப்பாவு, அப்போது தீரமானம் கொண்டு வரலாம் எனவும் தெரிவித்தார்.

ஆனால் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு கள்ளச்சாராய விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என தொடர்ந்து அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல ஏற்கனவே நேற்று ஒரு நாள் தடைவிதிக்கப்பட்டு அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் இன்றும் சட்டப்பேரவை தொடங்கிய நேரத்திலிருந்தே அதிமுகவினர் அமளி செய்தனர். அதற்கு சபாநாயகர் அப்பாவு, பதிலளிக்கையில், அனைவரும் இருக்கையில் அமர வேண்டும் எனவும், தனது பேச்சில் திருப்தி இல்லை என்றால் எதுவேண்டுமானாலும் செய்யுங்கள் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து அதிமுகவினர் சபாநாயகரின் இருக்கையைச் சுற்றி அமளியில் ஈடுபட்டதால், அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றும்படி அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதனிடையே, அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சிகளைப் பற்றி பேசினார். எதிர்க்கட்சிகள் மலிவான விளம்பரத்தை தேடி அலைகிறார்கள். பேரவை விதி 121ன் கீழ் அதிமுக உறுப்பினர்களை தற்காலிக இடை நீக்கம் செய்ய வேண்டும் என தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதை அடுத்து, அதிமுக உறுப்பினர்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Tags:    

Similar News