அ.தி.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி: மதுரை மாநாட்டில் உறுதியானது

அ.தி.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி இடம்பெற போவது மதுரை மாநாட்டின் மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2024-01-08 13:03 GMT

மதுரை எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார்.

மதுரையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டில்  எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மதுரையில் எஸ்டிபிஐ கட்சி மாநாடு நேற்று நடைபெற்றது.இந்த மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் மனம் குளிர்ந்து போனார் எடப்பாடி பழனிசாமி. இதன் காரணமாக  தேர்தல் கூட்டணி இட பங்கீடு தொடர்பாக சில முக்கிய முடிவுகளை விரைவில் எடுப்பார் எனத் தெரிகிறது.

இதனிடையே மாநாடுக்கு திரண்ட கூட்டமெல்லாம் ஓட்டாகுமா என்ற கேள்வியும் எழுந்து நிற்கிறது. காரணம், எஸ்.டி.பி.ஐ. மாநாட்டில் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மட்டும் கலந்துகொள்ளவில்லை. அந்த தொண்டர்களின் நண்பர்கள், சுற்றத்தார், கட்சி சாராத இஸ்லாமிய பொதுமக்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாவட்டத்தில் 1 தொகுதியை எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு அ.தி.மு.க. ஒதுக்குமா அல்லது சட்டமன்றத் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என்ற உறுதியை அ.தி.மு.க. அளிக்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது. இதனிடையே எஸ்.டி.பி.ஐ. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை  தொடர்பாக சட்டரீதியான விடுதலை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

நீட் தேர்வுக்கு விலக்கு  தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு விரைவில் நிறைவேற்றிட வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் அவல நிலையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை விரைவில் செயல்படுத்த வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கான பீக் ஹவர் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

சிறுபான்மை முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்.

சச்சார் கமிட்டி போன்று தமிழக முஸ்லிம்களின் வாழ்நிலைகள் குறித்து அறிய கமிட்டி அமைக்க வேண்டும். 

பள்ளிவாசல், தேவாலயம் கட்டும் அனுமதியை எளிமையாக்க வேண்டும்.

பல்கலைக்கழக துணை வேந்தர், டி.என்.பி.எஸ்.சி. பொறுப்புகளுக்கு சிறுபான்மை சமூகத்தவர்களையும் நியமிக்க வேண்டும்.

ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தை தொய்வின்றி தொடர வேண்டும்.

நில ஒருங்கிணைப்பு சிறப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

அரசியல் பழிவாங்கும் ஏவல் கருவியாக மாற்றப்படும் விசாரணை அமைப்புகள் கண்டிக்கத்தக்கது.

சிறுபான்மை வெறுப்பு நடவடிக்கைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கிட வேண்டும்.

கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்தும் பாஜக அரசின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

படித்த இளைஞர்களை ஏமாற்றாமல் அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை வெளிப்படைத் தன்மையுடன் விரைவாக நிரப்ப வேண்டும். அனைத்துத் துறைகளிலும் சமூக நீதியை நிலைநாட்ட சமவாய்ப்பு ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஆக்கிரமிப்பு வக்பு சொத்துக்களை மீட்டு, அதன்மூலம் சிறுபான்மை சமூகம் பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

மாநில சிறுபான்மை சமூக அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பதவி உயர்வு வழங்கப்பட  வேண்டும்.

தமிழகத்தில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு தனியாக அமைச்சகம் அமைக்க வேண்டும்.

விவசாய நிலங்களை பாழ்படுத்தும் திட்டங்கள், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் அழிவுத் திட்டங்கள் ஆகியனவற்றிலிருந்து தமிழகத்தை பாதுகாக்க வேண்டும். 

விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநிதித்துவம் கொண்டுவர வேண்டும். 

தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமையை உறுதி செய்வதோடு, 33% இடஒதுக்கீட்டை விரைவில் விரைவில் செயல்படுத்த வேண்டும். 

தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும்.

நலிவடைந்துவரும் சிறு, குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்த வேண்டும்.

சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவது அரசியலமைப்பிற்கு எதிரானது. 

தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு எதிராக அதிகரித்துவரும் சாதிய தாக்குதல்களை தடுத்திட வேண்டும். 

இந்திய குற்றவியல் நீதி அமைப்பை மாற்றும் புதிய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.  அரசு வேலைவாய்ப்பில் தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்வி நிறுவனத்தின் கல்விச் சான்றிதழை அங்கீகார குறைப்பு செய்த அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

மதச்சார்பற்ற இந்திய நாட்டை அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கோவையில் நடைபெற்ற கிறிஸ்தவ பாதிரியார்கள் மாநாட்டில் பங்கேற்றார். இப்போது இஸ்லாமிய கட்சியான எஸ்டிபிஐ கட்சி மாநாட்டிலும் பங்கேற்று இருப்பதால் சிறுபான்மையினர் அ.தி.மு.க.வின் பக்கமும் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து வருகிறார்.

Tags:    

Similar News