அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
திமுக பொதுச்செயலாளர் தேர்தலில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் பழனிசாமியின் மனு ஏற்கப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் கடந்த 17-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 18-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்று, பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே இந்த தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 19-ம் தேதி நடைபெற்ற விசாரணையில், தேர்தல் நடத்த தடையில்லை. ஆனால் முடிவை அறிவிக்கக் கூடாது எனஉத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை இரு தரப்பினரும் வரவேற்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக, உரிய பதிலளிக்கும் படி எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அன்றைய தினம் மாலையே, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச்26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில், மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர் .
இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரித்த உயர்நீதிமன்றம் , அனைத்து வழக்குகளையும் சேர்த்து மார்ச் 22-ம் தேதி விசாரிப்பதாகத் தெரிவித்தது. அதுவரை பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.