பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு
உள்ளாட்சித் தேர்தல், உள்கட்சி பிரச்சனைகளுக்கு மத்தியில் அதிமுக செயற்குழு கூட்டம், சென்னையில் இன்று நடைபெறுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான, எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு, அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.
அதிமுக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட, 260-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்கின்றனர். அதிமுக அவைத்தலைவர் பதவி காலியாக உள்ளது. அதற்கு யாரை நியமிப்பது என்பது குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.
அதிமுகவில் நீடித்து வரும் உட்கட்சி பிரச்சனை, ஒற்றைத்தலைமை என்ற கோஷம், சசிகலா விவகாரம், அன்வர் ராஜா நீக்கம், உள்ளாட்சித் தேர்தல், அரசியல் கூட்டணி என்று பல நெருக்கடிகளை அதிமுக சந்தித்து வருகிறது. இந்த சூழலில் இன்று நடைபெறும் கூட்டம் முக்கியத்தும் பெறுகிறது.