மாநிலங்களவை தேர்தல்: ஒருவழியாக வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக முன்னாள அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஆர். தர்மர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மாநிலங்களவை எனப்படும் ராஜ்யசபாவுக்கு, கால் இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. அதன்படி, தமிழகத்தில் இருந்து ஆறு இடங்களுக்கு தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், திமுக கூட்டணிக்கு 4 இடங்கள், அதிமுகவுக்கு 2 இடங்கள் என்ற நிலையில், திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
எனினும், அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களை இறுதி செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது. இரண்டு இடங்களுக்கு மூத்த தலைவர்கள் நீயா நானா என்று களமிறங்கினர். கடும் போட்டி நிலவியதால் வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல், அதிமுக தலைமை தடுமாறியது.
இச்சூழலில், ஒருவழியாக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது. அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோரை வேட்பாளர்களாக ஓபிஎஸ் -இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.