எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்ய தயாரா? பாஜகவுக்கு அதிமுக சவால்
அதிமுக பாஜக இடையே, வார்த்தைப்போர் தொடங்கிவிட்டது; எம்.எல்.ஏ. பதவிகளை பாஜக ராஜினாமா செய்யத் தயாரா என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.;
நயினார் நாகேந்திரன் - ராஜ் சத்யன்
சென்னையில் நேற்று பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச, ஒரு அதிமுக எம்.எல்.ஏ. கூட இல்லை. எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பாஜக தலைவர் அண்ணாமலை மட்டுமே, துணிச்சலோடு செயல்படுகிறார் என்று பேசினார்.
கூட்டணி கட்சியான பாஜக தரப்பில் இவ்வாறு பேசியது, அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியையும், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. எனினும், உடனடியாக அதிமுக தரப்பில் இருந்து எந்த கருத்தும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன், நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி தந்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், நீங்கள் வேண்டுமானால் அதிமுக தோள்மேல் தொற்றிக்கொண்டு பெற்ற சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் வெற்றி பெற தங்கள் ஆண்மையை நிரூபியுங்கள்? ஆண்மை என்பது சொல்லல்ல செயல் என்று கூறியுள்ளார்.
அதிமுக - பாஜக இடையே ஏற்பட்டுள்ள இந்த வார்த்தைப்போர், தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.