அதிமுக- பாஜக கூட்டணியில் பிளவு? கேட்ட வார்டு கிடைக்காததால் அதிருப்தி

வார்டு ஒதுக்கீடு, தன்னிச்சையாக பட்டியல் வெளியிட்டது உள்ளிட்டவற்றால் அதிமுக மீது அதிருப்தியில் உள்ள பாஜக, தனித்து போட்டியிட பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.;

Update: 2022-01-31 04:15 GMT

தமிழகத்தில், 21 மாநகராட்சிசகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரேகட்டமாக, தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

இதனிடையே, இடங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, அதிமுக - திமுக அணிகள், தத்தமது கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தையை நடத்தி வருகின்றன. அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, பாமக தனித்து களமிறங்கும் நிலையில், பாஜக - அதிமுக இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.


அ.தி.மு.க தரப்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், பி.எச்.பாண்டியன் ஆகியோர் கொண்ட குழுவை, பா.ஜ. மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, மேலிடப் பார்வையாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் கொண்ட குழு சந்தித்து பேச்சு நடத்தியது.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. பாஜக தரப்பில் காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், மதுரை புறநகர், கன்னியாகுமரி என 15 மாவட்டங்களில் சாதகமான நிலைமைகளை சொல்லி, அங்கு அதிக இடங்களை கேட்டதாக கூறப்படுகிறது.

அத்துடன், கோவை, வேலூர், நெல்லை, நாகர்கோவில் ஆகியவற்றில் ஏதேனும் இரண்டில் மாநகராட்சி மேயர் இடங்களை கேட்டதாகவும் தெரிகிறது. ஆனால், இதை அதிமுக திட்டவட்டமாக நிராகரித்து விட்டது. கேட்ட இடங்களின் எண்ணிக்கையை கொஞ்சம் விட்டுக் கொடுத்து பாஜக இறங்கி வந்த போதும், அதிமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது, பாஜகவினருக்கு அதிருப்தியை தந்துள்ளது.

இதனிடையே, பேச்சு வார்த்தை முடிவு பெறாத நிலையிலேயே, நேற்று (ஜனவரி 30) இரவு அதிமுக தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதனப்டி, கடலூர் மாநகராட்சி, கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் நகராட்சி, தர்மபுரி நகராட்சி ஆகியவற்றுக்கான, அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது.


அதிமுக கூட்டணியில், பாஜக தரப்பில் 20 சதவீத இடங்களை கேட்ட நிலையில், அதிமுகவோ, 5 சதவீத இடங்கள் என்பதில் உறுதியாக உள்ளது. குறைந்தபட்ச 10 சதவீத இடங்களை ஏற்கலாம் என்று பாஜக கருதி வந்த நிலையில், தன்னிச்சையாக, அதிமுக தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது, பாஜக தலைமைக்கு அதிர்ச்சியையும், அதிருப்தியையும் தந்துள்ளது.

எனவே, அதிமுகவுக்கு 'ஷாக்' தரும் வகையில், தனித்து களமிறங்க, பாஜக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைமை இன்று வெளியிட திட்டமிட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே, இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள், கூட்டணி பிளவு படாமல் இருக்கும் இறுதிகட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜகவை உதறிவிட்டால், அதிமுக நிலை அதோகதியாகிவிடும் என்று, அதிமுக சீனியர்கள் சிலர், கட்சி தலைமைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் பலன் தராவிட்டால், அதிமுக கூட்டணிக்கு விடைகொடுத்து, பாஜக தனித்தே களமிறங்கும் என்பதே, சற்று முன்பு வரை உள்ள அரசியல் சூழலாகும்.

Tags:    

Similar News