ரிசல்ட் வந்ததும் அதிமுகவில் அதிரடி மாற்றம்: லிஸ்ட்டுடன் எடப்பாடி

ரிசல்ட் வந்ததும் அதிமுகவில் அதிரடி மாற்றம் செய்வதற்கான லிஸ்ட்டுடன் எடப்பாடி பழனிசாமி தயார் நிலையில் உள்ளார்.

Update: 2024-04-29 10:34 GMT

எடப்பாடி பழனிசாமி.

பாராளுமன்ற தேர்தல் முடிவுக்காக தமிழ்நாடு ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கிறது.இதில், தேமுதிகவுக்கு 5, புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கிவிட்டு, மிச்சமுள்ள 32 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட்டுள்ளது..

இந்தமுறை, விட்டதை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பு அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் எதிர்க்கட்சி தாங்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.. அதனால்தான், தமிழகமெங்கும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.. மற்றொருபக்கம் தேர்தல் வேலைகளிலும் பிரத்யேகமாக கவனம் செலுத்தியிருந்தார். முக்கியமாக, கோவையில் அண்ணாமலை, தேனியில் டிடிவி தினகரன், ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் 2வது இடத்துக்கு வரவே கூடாது என்று அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தாராம் எடப்பாடி பழனிசாமி.. ஆனால், அதிமுக நிச்சயமாக 3வது இடத்தையே பிடிக்கும், பல இடங்களில் டெபாசிட் பறிபோகவும் வாய்ப்புள்ளதாகவும் பாஜக கூட்டணிகள் கூறி, அதிமுகவை சீண்டி கொண்டிருக்கின்றன. 

இப்படிப்பட்ட சூழலில்தான், எரிகிற தீயில் இன்னும் கொஞ்சம் எண்ணெய்யை ஊற்றுவதுபோல, தேர்தலின்போது நிர்வாகிகள் பலரும் சரியாக வேலை செய்யவில்லை என்ற தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு எட்டியிருக்கிறது.. கடமைக்காகவே நிறைய பேர் தொகுதியில் வந்துசென்றாலும். கட்சி செலவுக்காக தலைமை கொடுத்த நிதியை, யாருக்கும் பகிர்ந்தளிக்கவில்லையாம்.

இந்த பிரச்சனை முதலில் வெடித்தது சென்னையில்தான்.மொத்த பணத்தையும், மேல்மட்ட நிர்வாகிகளே பகிர்ந்து கொண்டதாகவும், பூத் செலவுக்கே கஷ்டப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் புகார்கள் எடப்பாடி காதுக்கு சென்றதாக தெரிகிறது. அதனால்தான், சென்னையில் 15 மாவட்ட செயலாளர்கள், தென் சென்னை, வடசென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் என அனைவருடனும் 4 நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.

பிறகு அங்கிருந்த நிர்வாகிகளிடம் செம டோஸ் விட்டிருக்கிறார்.அதிமுக மீது ஏன் பற்று குறைந்துவிட்டது? அம்மா காலத்தில் காட்டப்பட்ட வேகம் இப்போது ஏன் குறைந்துவிட்டது? மாற்று கட்சி வேட்பாளர்களிடம் விலைபோனீர்களா? என்றெல்லாம் சத்தம் போட்டாராம். இதையடுத்து, யாரெல்லாம் தேர்தல் பணியில் ஈடுபடவில்லையோ அந்த லிஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறதாம்.

"என் கையில் முழுமையான ரிப்போர்ட் வந்ததும், தேர்தலில் சரியாக வேலை செய்யாத நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள்" என்று எச்சரித்துவிட்டு போனாராம் எடப்பாடி. ஆனால், இதற்கு பிறகுதான் தெரியவந்தது, மற்ற தொகுதிகளிலும் கிட்டத்தட்ட இதுபோலவே களப்பணியில் சொதப்பல் நடந்துள்ளதாம்.சில மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் வேட்பாளர்களுக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் தற்போது எடப்பாடியின் கவனத்துக்கு வந்துள்ளது. அதிமுக வேட்பாளர்களை அழைத்துச்சென்று, சம்பந்தப்பட்ட தொகுதியில் ஓட்டுக் கேட்க வேண்டியது அந்தந்த மாவட்டச் செயலாளரின் கடமையாகும்.இதற்காக எந்தெந்த பகுதிக்கு எப்போது செல்ல வேண்டும் என்று அட்டவணை தயாரித்து, அதன்படி கட்சி நிர்வாகிகளுக்கு தகவலையும் தெரிவிக்க வேண்டும். ஆனால், இந்த வேலையைகூட சில மாவட்டச் செயலாளர்கள் சரியாக செய்யவில்லையாம்.

இதையெல்லாம் புகாராக ரெடி பண்ணி, ஒன்றிய செயலாளர்களே தலைமைக் கழகத்துக்கு அனுப்பி இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலிருந்து வரும் இந்த புகார்களை எல்லாம் லிஸ்ட் போட்டு எடப்பாடியிடமே தந்துவிட்டாராம் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன்.. அந்தவகையில், காஞ்சிபுரம், வடசென்னை, தென் சென்னை, கள்ளக்குறிச்சி இப்படி 15 தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் மீதமுள்ள 25 தொகுதிகளில் உள்ள கள நிலவரம் பற்றி கலக்கத்துடனே இருக்கிறதாம் அதிமுக.எப்படியும் ஜூன் 4-ந்தேதி ரிசல்ட் வந்ததும், அதிமுகவில் மிகப்பெரிய அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்கிறார்கள்.

இந்த புகார்களையெல்லாம் பார்த்து, அதிமுக 2வது இடம் பிடிக்குமா? 3வது இடம் பிடிக்குமா? என்ற விவாதத்தை எதிர்க்கட்சிகள் துவங்கிவிட்டனவாம்.. கணிப்புகளும், அனுமானங்களும் எதுவானாலும், உண்மையான விடை, வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும். பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

Similar News