தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற அமித்ஷாவின் கடந்த கால பேச்சின் பின்னணி பற்றி பல தகவல்கள் கூறப்படுகிறது.;
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரப்போகிறார். பிரச்சாரம் செய்வதற்காகவே அமித்ஷா வருகிறார் என்றாலும் அவரது கடந்த கால பேச்சின் பின்னணி பற்றி இப்போது நினைவு கூறவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
கடந்த வருடம் ஜூன் மாதம், உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்திருந்தார். அப்போது, "தமிழகத்தில் முதல்வர் ஆகவேண்டும் என்று மட்டும் நினைக்காமல், தமிழகத்திலிருந்து ஒருவர், பிரதமராக வரவேண்டும் என நினைக்க வேண்டும். அதுவும், ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவரை பிரதமராக்க வேண்டும். இதை பாஜகவால்தான் செய்ய முடியும்" என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு போனார்.
அதுமட்டுமல்ல, "தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமர் ஆகும் வாய்ப்பு 2 முறை வந்தது. அதனை கெடுத்தது திமுகதான். ஆனால், தமிழகத்திலிருந்து ஒரு பிரதமரை பாஜக இந்த முறை நிச்சயம் உருவாக்கும்" என்றும் திடமாக கூறியிருந்தார் அமித்ஷா. அமித்ஷா எது பேசினாலும், அது ராஜதந்திர பேச்சுக்களாகவே இருக்கும் என்றாலும், தமிழ்நாட்டிலிருந்து பிரதமர் வேட்பாளரா? யாராக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு கூடியது.
ஒருவேளை தேர்தல் முடிவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு பாராளுமன்றம் அமைக்க நேர்ந்தால், அப்போது மோடிக்கு பதிலாக, தமிழிசையை தேர்வு செய்யலாம் என்பதே பாஜகவின் திட்டமாம். இதையெல்லாம் மனசில் வைத்தே, அமித்ஷா அவ்வாறு பேசியிருக்கலாம் என நமக்கு தகவல்கள் கிடைத்தன. அதற்கேற்றபடியே, அமித்ஷாவின் நம்பிக்கைக்குரியவரான, தமிழிசை தற்போது தென்சென்னையில் களமிறக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
இன்னொரு விஷயத்தையும் இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது. அதிமுகவுடனான கூட்டணிக்கு பாஜக எவ்வளவோ முயன்றும், அது எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தினால் கைகூடவில்லை. இரட்டை இலையை முடக்குவோம் என்ற ஆயுதத்தை வீசியபோதும், எடப்பாடி அதற்கு அசரவில்லை. இறுதியில், அதிமுகவுடன் ஒரு சமரசம் பேசப்பட்டதாம். அதாவது, தமிழகத்தில் பாஜகவுக்கு 5 எம்பிக்களாவது கிடைக்க வேண்டும் என்று பாஜக மேலிடம் விரும்புகிறதாம். எனவே, தங்களுக்கு பலம்வாய்ந்த 5 தொகுதிகளில், வெற்றி பெறுவதற்கு அதிமுக மறைமுகமாக உதவ வேண்டும் என்று உதவி கோரப்பட்டதாம்.
அதாவது, "அதிமுக வேட்பாளர்கள் வலிமையான நபர்களாக இல்லாமல், சாதாரண வேட்பாளர்களாக இருந்தாலே பாஜக வெற்றி பெற்றுவிடும், இதற்கு கைமாறாக, இரட்டை இலை முடக்கப்படாது என்பதே டெல்லியின் கோரிக்கையாக இருந்துள்ளது. இதற்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பு மறுத்துள்ளதாக தெரிகிறது. பாஜக கேட்டுக் கொண்டதுபோலவே, பலவீனமான வேட்பாளரை அதிமுக நிறுத்தினாலும், பலம் வாய்ந்த வேட்பாளரை திமுக நிறுத்தினால் என்ன செய்வீர்கள்? என்று எடப்பாடி தரப்பு திருப்பி கேட்டதாம். இதற்கு பாஜகவின் பதில் என்னவென்று தெரியவில்லை.
இப்படி பல்வேறு வியூகங்கள் பாஜக மேலிடத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில்தான், தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, பிரச்சாரமும் விறுவிறுப்பாகி உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வரப்போவதாக செய்திகள் கசிந்து வருகின்றன. முதல்கட்டமாக ஏப்ரல் 4, 5 என 2 நாட்கள் அமித்ஷா சுற்றுப்பயணம் செய்ய போகிறாராம். ஏப்ரல் 4-ல் தமிழகம் வரும் அமித்ஷா, மதுரை, சிவகங்கை தொகுதிகளிலும், ஏப்ரல் 5-ல் சென்னையின் பல பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா மேற்கொள்ளும் இந்த பிரச்சாரம், மிகுந்த முக்கியத்துவத்தை இப்போதே ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம், தமிழ்நாட்டிலிருந்து பிரதமரை உருவாக்க போவதாக சொல்லியிருப்பதால், அது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.