தமிழகத்தில் கூட்டணி பற்றி பேச பா.ஜ.வில் 7 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழகத்தில் கூட்டணி பற்றி பேச பா.ஜ.வில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-02-29 13:54 GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

லோக்சபா தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு பாஜக சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய 4 கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டை முடித்துவிட்டது திமுக

இந்த கட்சிகளுக்கு இதுவரை மொத்தமாக 6 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.திமுக. வரும் வாரத்தில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்து, இறுதி பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. கூட்டணி பேச்சுகளை பொறுத்தளவில் திமுக, மற்ற கட்சிகளை விட முன்னோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. அதே நேரத்தில் அதிமுகவும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிறது. தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளோடு அதிமுக தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது. அதேபோல, பாஜகவும், தங்கள் அணியில் பல்வேறு கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி, ஜான் பாண்டியன், தேவநாதன் யாதவ் ஆகியோர் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வமும் பாஜக கூட்டணியில் இணைவதை உறுதி செய்துள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், விருப்ப பட்டியலை பாஜக தேசிய தலைமையிடம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு ஆலோசணை நடத்த தமிழ்நாடு பாஜக சார்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அனுமதியுடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திடவும், ஒருங்கிணைத்திடவும் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது. 

இதற்காக அமைக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட குழுவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய செயலாளர் மற்றும் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழ்நாடு தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா மற்றும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேர்தலையொட்டி என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை மேற்கொண்டார். இந்த யாத்திரை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த 27ஆம் தேதி நிறைவடைந்தது. இதன் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அத்துடன், அந்த கூட்டத்தில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த சூழலில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் கூட்டணியை மேலும் பலப்படுத்தும் நோக்கில் மாநில அளவில் தொகுதிப் பங்கீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்தக் குழுவினர், பாஜக கூட்டணியில் இணையவுள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனத் தெரிகிறது. லேட்டாக குழுவை அமைத்தாலும், அதிரடியாக ஆக்‌ஷனில் இறங்க உள்ளது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News