பீகார் அமைச்சரவையில் பா.ஜ.விற்கு 2 துணை முதல்வர் பதவி: டீலிங்கில் முடிவு

பீகார் அமைச்சரவையில் பா.ஜ.விற்கு 2 துணை முதல்வர் பதவி வழங்குவது என முதல்வர் நிதிஷ்குமாருடன் நடந்த டீலிங்கில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2024-01-26 16:17 GMT

பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.

பீகாரில் பாஜகவுடன் மீண்டும் கை கோர்க்க முதல்வர்  நிதிஷ் குமார் தயாராகி வரும் நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே பதவிகளை பங்கிட்டு கொள்வதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்படி, நிதிஷ் குமார் முதல்வராகவும் துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த இரண்டு பேர் பதவியேற்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி போட்டியிட்டது. பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் லாலுவின் ஆர்ஜேடி கட்சி 75 இடங்களிலும் பாஜக 74 இடங்களிலும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றது. பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் முதல்வரானார்.

ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜகவுடனான கூட்டணியை நிதிஷ் குமார் முறித்துக் கொண்டார். முதல்வர் பதவியில் இருந்து விலகி உடனடியாக ஆர்ஜேடி, ஜேடியூ, காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் இணைந்து மீண்டும் மகா கூட்டணியை அமைத்த நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றார். அதன்பிறகு பாஜகவை மிகக் கடுமையாக நிதிஷ் குமார் விமர்சித்தார். நிதிஷ்குமாருக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதாகவும் இனி பாஜக கூட்டணியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்றும் பீகார் பாஜக தலைவர்கள் விமர்சித்தனர். இதற்கிடையே, லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது. இந்தக் கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு நிதிஷ் குமாருக்கு உண்டு. எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முதன் முதலில் பாட்னாவில்தான் நடைபெற்றது.

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் என சுமார் 28 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்தன. ஆனால் தற்போது தொகுதி பங்கீட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள் அதிருப்தி ஏற்பட்டது. இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு திடீரென பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவித்தது. இது பீகார் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது.

கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது கொடுத்ததால், பாஜகவையும் பிரதமர் மோடியையும் நிதிஷ் குமார் பாராட்டி பேசினார். அதோடு லாலு பிராசத் யாதவை விமர்சித்தார். இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது நிதிஷ் குமார் மீண்டும் பாஜக பக்கம் தாவ திட்டமிட்டு வருவதாக பீகாரில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் வெல வெலத்து போயுள்ளன. பீகார் மாநில சட்டசபையை கலைப்பது தொடர்பாக நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் "இந்தியா" கூட்டணியை உதறி தள்ளிவிட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே மீண்டும் இணையவும் நிதிஷ் குமார் முடிவெடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பீகார் மாநில பாஜக தலைவர்கள் அமித்ஷாவை சந்திக்க டெல்லி புறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. மகாபந்தன் கூட்டணியில் இருந்து வெளியேறி, வரும் ஞாயிற்றுக்கிழமை பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி நிதிஷ் குமார் 7-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார் எனவும் அவருடன் பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் பீகார் மாநில அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், இரு கட்சிகளும் தங்களின் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. 

Tags:    

Similar News