12 மணி நேர வேலை சட்டம் திரும்ப பெறப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

12 மணி நேர வேலை சட்டம் திரும்ப பெறப்படும் என முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Update: 2023-05-01 08:58 GMT

முதல்வர் ஸ்டாலின்.

12 மணிநேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். 

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா  ஏப்ரல் 21 ஆம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, வி.சி.க. உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற மே தின விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், " 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக ஏப்ரல் 24-ந் தேதி அறிவித்திருந்தோம். இந்த 12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக இன்று அறிவிக்கிறேன். ஒரு சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் என்றால், அதனை உடனடியாக திரும்பப் பெறுவதும் துணிச்சல்தான்" என்றும் அப்போது  அவர் கூறினார்.

முன்னதாக தொழிலாளர் தினம் இன்று கொண்டாப்படுவதை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு சிவப்பு சட்டை அணிந்து சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முதல்-அமைச்சருடன், தி.மு.க.வின் தொ.மு.ச.வை சேர்ந்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து மே தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

௧௨ மணி நேர வேலை சட்டம் தனியார் தொழிலாளர்கள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தொழிலாளர் தினமான இன்று அந்த சட்டம் திரும்ப பெறப்படுவதாக முதல்வர் அறிவித்து இருப்பது தொழிலாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News