உலகிலேயேஇளம்வயதில்தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ராஜீவ்காந்தி நினைவுதினம்
இந்தியாவை பொறுத்தவரை அவரது முக்கிய நோக்கம் ஒற்றுமை அதன் பிறகு நாட்டை 21-வது நூற்றாண்டிற்காக தயார் செய்வது தான்..
உலகிலேயேஇளம்வயதில்தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ராஜீவ்காந்தி நினைவுதினம்
உலகிலேயே இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களான சிலரில் ராஜீவ் காந்தியும் ஒருவர். அவரது தாயார் இந்திராகாந்தி 48 வயதில், 1966 ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமராக பொறுப்பெற்றார். அவரது தாத்தா பண்டிட் ஜவஹர்லால் நேரு தனது 58 வயதில் சுதந்திர இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றார் 17 ஆண்டுகள் தொடர்ந்து பிரதமராக இருந்தார்.
தேசிய வரலாற்றில் ராஜீவ் காந்திக்கு முக்கிய பங்கு உண்டு. சுட்டுக் கொல்லப்பட்ட தனது தாயாரின் இறுதிசடங்கு முடிந்த உடனே அவர் மக்களவை தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அந்த தேர்தலில் ஏழு ஆண்டுகளாக இல்லாத அளவு ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் வென்றது. 508 தொகுதிகளில் 401 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது.ராஜீவ் காந்திஅவர் பெருவாரியான வெற்றி பெற்று இந்தியர்களுக்கு தலைவரானது எந்த காலத்திலும் யாராலும் மறக்க முடியாதது.
இதையெல்லாம் விட சுவாரஸ்யமானது ராஜீவ்காந்தி அரசியலுக்கு வந்த கதைதான். இவரது குடும்பம் நான்கு தலைமுறையாக அரசியலில் ஈடுபட்டுள்ளனர் என்றாலும் இவருக்கு அரசியலில் நாட்டம் இல்லை.
ராஜீவ்காந்தி 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி மும்பையில் (பம்பாய்) பிறந்தார். அவரின் 3 வது வயதில் அவரது தாத்தா பிரதமரானார். அவரது பெற்றோர்கள் லக்னோவில் இருந்து புதுடெல்லிக்கு இடம் பெயர்ந்தனர். அவரது தந்தை பெரோஸ் காந்தி நாடாளுமன்ற உறுப்பினரானார். அவரது தந்தை மிகவும் துணிச்சலும், கடும் உழைப்பும் உடைய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெயர் பெற்றவர்.
ராஜீவ்காந்தி தனது குழந்தை பருவத்தில் தனது தாத்தாவுடன் தீன் மூர்த்தி இல்லத்தில் இருந்தார். அங்கு இந்திரா காந்தி பிரதமரின் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்தார். அவர் சிறிது காலம் டேராடூனில் உள்ள வெல்ஹாம் பிரப்பள்ளியில் கல்வி பயின்று பின்னர் இமய மலையின் அடிவாரத்தில் உள்ள தங்கும் வசதி கொண்ட டூன் பள்ளிக்கு மாற்றப்பட்டார். அங்குதான் அவர் தனது வாழ்நாள் நண்பர்களை சேர்த்துக்கொண்டார். இவரை தொடர்ந்து இவரது இளைய சகோதரர் சஞ்சயும் இப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் ராஜீவ் காந்தி கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், விரைவில் அவர் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். இயந்திர பொறியியல் படிப்பை படித்தார். தேர்விற்காக மனப்பாடம் செய்வதில் சிறிதும் விருப்பம் இல்லாதவராகவே அவர் இருந்து வந்தார்.
அரசியலை தனது வாழ்க்கையில் தொழிலாக எடுத்துக் கொள்வதில் அவருக்கு விருப்பம் இல்லை.அவருடன் படித்தவர்களைப் பொறுத்தவரை அவரது புத்தக அலமாரி முழுவதும் பல்வேறு அறிவியல், பொறியியல் சம்பந்தமான புத்தகங்கள்தான். அரசியல், வரலாறு அல்லது தத்துவம் பற்றி எந்த புத்தகமும் இல்லை.இசையில் அவருக்கு நாட்டம் அதிகமுண்டு. மேற்கத்திய இசை, இந்துஸ்தானி, நவீன இசையையும் அவர் விரும்பினார். இதைத்தவிர புகைப்படம் மற்றும் அமெச்சூர் ரேடியோவிலும் அவருக்கு நாட்டம் அதிகம் இருந்தது.
அவருக்கு மிகவும் பிடித்தது விமானம் ஓட்டுவது. இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தவுடனே டெல்லி விமான ஓட்டுதல் கழகத்தின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற்றார். அங்கு அவர் வணிக விமான ஓட்டுநர் உரிமம் பெற்றார். பின், இந்தியன் ஏர்லைன்சில் விமான ஓட்டுநராகச் சேர்ந்தார்.
அவர் கேம்பிரிட்ஜ்ஜில் இருந்தபோது ஆங்கிலத்துறையில் படித்துக் கொண்டிருந்த இத்தாலி பெண் சோனியா மைனோவை சந்தித்தார். அவர்கள் 1968-ல் புதுடெல்லியில் திருமணம் செய்து கொண்டனர். தங்களது இரு குழந்தைகள் ராகுல் மற்றும் பிரியங்காவுடன் இந்திராகாந்தியின் இல்லத்தில் இருந்தனர். அவர்களை சுற்றி பல அரசியல் நிகழ்வுகள் நடந்தாலும் அவர்கள் தனிமையான வாழக்கையை இனிமையாக வாழ்ந்து வந்தனர்.
ஆனால், 1980 ம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்த அவரது சகோதரர் சஞ்சயின் மரணம் அவர்களது தனிமை வாழ்க்கையை புரட்டி போட்டது. அரசியலில் ராஜீவ்காந்தி இறங்கி அவரது தாயாருக்கு உதவவேண்டும் என்ற நெருக்கடியும் ஏற்பட்டது. முதலில் மறுத்தாலும் உண்மையை புரிந்து அதனை ஏற்றுக்கொண்டார். உத்திரபிரதேசம் அமேதி தொகுதியில் இருந்த அவரது சகோதரரின் மரணத்தினால் ஏற்பட்ட நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அவர் வெற்றி பெற்றார்.
1982 ஆம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான விளையாட்டுகள் இந்தியாவில் நடந்தது. இதற்கு தேவையான விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யயப்பட்டன. இந்த போட்டிகள் எந்தவித தடையும் இல்லாமல் சுமூகமாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் நடப்பதை ராஜீவ்காந்தி உறுதி செய்தார்.
இந்த சவாலான பணியை வெற்றிகரமாக முடிக்க அவர் தனது முழு திறமையும் ஒருங்கிணைப்பு திறனையும் வெளிப்படுத்தினார். அதே சமயம் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக கட்சியை மேம்படுத்தவும் நெறிமுறைபடுத்துவதற்கும் பல நடவடிக்கைகளை எடுத்தார்.
1984 அக்டோபர் 31 அன்று அவரது தாயார் கொடுமையான முறையில் சுட்டு கொல்லப்பட்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரதமராகவும் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்கும் திறனும் மனிநிறைவையும் வேறுயாருக்கும் வராது. தனது சொந்த வாழ்க்கையில் உள்ள சிரமங்களை பொருட்படுத்தாமல் நாட்டிற்காக தனது கடமையைத் தெளிவாகவும் துல்லியமாகவும் சிறப்பான முறையிலும் செயல்படுத்தினார்.
மாதம் முழுவதும் நடந்த தேர்தல் பிரச்சாரத்திற்காக தராஜிவ் காந்தி நாடு முழுவதும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு அயராது பயணம் செய்தார். இந்த பிரச்சாரத்தின் போது உலகின் சுற்றளவைவிட இரண்டு மடங்கு தூரம் அவர் பயணம் செய்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த 250 பொது கூட்டங்களில் கோடிகணக்கான மக்களைச் சந்தித்துப் பேசினார்.
விதி வலியது கடந்த 1991 ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
ராஜீவ் காந்தி பிறந்த நாளான ஆகஸ்டு,20 ம் தேதி இந்தியாவில் சமய நல்லிணக்க நாளாக அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதி மொழி எடுத்துக் கொண்டாடப்படுகிறது.
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மறைந்த தினம் தீவிரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
நவீன எண்ணங்களும் அதிக தொழில்நுட்பமும் தெரிந்திருந்தாலும் அவர் எளிய வாழ்க்கையையே வாழ்ந்தார். அவர் அடிக்கடி கூறுவது ஒன்றுதான். இந்தியாவை பொறுத்தவரை அவரது முக்கிய நோக்கம் ஒற்றுமை அதன் பிறகு நாட்டை 21-வது நூற்றாண்டிற்காக தயார் செய்வது தான்....