நடிகர் கமலஹாசனை பற்றி பேசி அவரை வளர்த்து விட விரும்பவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடியில் பேசினார்.
தூத்துக்குடி சந்தை ரோடு மற்றும் கால்டுவெல் காலனி பகுதியில் அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மினி கிளினிக்குகளை திறந்து வைத்தார். தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகிற ஜனவரி 3,4-ந்தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி வர உள்ள நிலையில் பிரசார திட்டத்தின்படி பத்திரிக்கையாளர் சந்திப்பு, முக்கிய தொழில் அதிபர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள், கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடைபெற உள்ள தனியார் ஹோட்டலை அமைச்சர் கடம்பூர் ராஜு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் 100% நிறைவேற்றித் தந்துள்ளது. அதுதவிர தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்படாத வாக்குறுதிகளாக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. குறிப்பாக அம்மா மினி கிளினிக்குகள் திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது உள்பட பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத திட்டங்களாக மக்களுக்கு பயன்படும் வகையில் தமிழக அரசு நிறைவேற்றித் தந்துள்ளது. எனவே வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அமரச் செய்வதற்கு மக்கள் தயாராகி விட்டனர்.
தமிழக தேர்தல் களத்தில் அதிமுக ஒன்றுதான் போட்டியாக நிற்கும் என்பதை நடிகர் கமலஹாசன் நன்கு தெரிந்து வைத்துள்ளார். மக்களின் ஏகோபித்த ஆதரவு அதிமுகவுக்கு இருக்கின்ற நிலையில் அதிமுகவை விமர்சிப்பதன் மூலமாக தினசரி நாளிதழ்களில் அவரைப் பற்றிய செய்தி வந்து கொண்டே இருக்கும் என்பதற்காக அதிமுக அரசினை விமர்சித்து வருகிறார். எங்களை விமர்சிப்பதன் மூலம் அவர் பெரிய ஆளாகி விடலாம் என நினைக்கிறார். அதிமுக அரசை மீண்டும் மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெறச் செய்து ஆட்சியில் அமரவைக்க மக்கள் தயாராகிவிட்ட நிலையில் கமலஹாசனை பற்றி பேசி அவரை வளர்த்து விடுவதற்கு விரும்பவில்லை என்றார். பேட்டியின் போது ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.