தமிழ்மொழியினை வாழவைத்த தமிழக முதல்வர் ஓமந்துாரார்..!
சென்னை மாகாணத்தின் பத்தாவது முதல்வராகப் பொறுப்பேற்ற ஓமந்தூரார் வெறும் 8-ம் வகுப்பு மட்டுமே படித்தவர்.;
ஓமாந்தூரார் குடும்ப பின்னணி அரச குடும்பமோ, ஜமீன் குடும்பமோ அல்ல. சாதாரண விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர். தமது நேர்மையான ஆட்சியாலும் கண்டிப்பு வாய்ந்த நிர்வாகத் திறமையாலும் அனைவர் உள்ளத்தையும் கவர்ந்து ‘சிறந்த ஆட்சியாளர்’ எனப் பாராட்டப்பட்டார். உயர்கல்வியே கற்காத காமராசரும், கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் முதல்வர் பதவிக்கு வருவதற்கு நல்ல முன்னுதாரணமாக ஓமந்தூரார் விளங்கினார் என்றால் மிகையாகாது.
அப்போது கோட்டையில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த பல ஐ.சி.எஸ். அதிகாரிகளைப் பணி ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவரது நேர்மையும், தூய்மையும் அதிகாரிகளைச் சிறந்த முறையில் பணிபுரியத் தூண்டின. முதல்-அமைச்சரை சட்டமன்ற உறுப்பினர்கள் வந்து பார்க்க வேண்டியதில்லை.
அவரவர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு சென்று மக்கள் குறைகளைக் கேட்டு வேண்டிய நடவடிக்கை எடுத்தாலே போதும் என அறிவுறுத்தினார். தாம் பதவிக்கு வந்தபின்னர் எந்தப் பாராட்டு விழாவையும் தமக்காக நடத்தக்கூடாது எனக் கண்டிப்புடன் தடுத்து விட்டார்.
தம்மை யார் பார்க்கவந்தாலும் என்ன காரணத்திற்காகப் பார்க்க வந்துள்ளார்கள் என எழுதியனுப்ப வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். சிபாரிசுக்காக யாரும் வரக்கூடாது என்பதிலும் சிபாரிசு கடிதம் யார் கொடுத்தனுப்பியிருந்தாலும் அதனைக் கிழித்துக் குப்பையில் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இன்றைய முற்போக்கான திட்டங்கள் பலவற்றிற்கு அவரே முன்னோடியாக விளங்கினார். ஜமீன் ஒழிப்பு, இனாம் ஒழிப்பு, தேவதாசிமுறை ஒழிப்பு ஆகியவற்றிற்கான சட்டங்கள் அவரால் தான் நிறைவேற்றப்பட்டன.
பயிர் காப்பீடு திட்டம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், கிணறு வெட்ட மானியம், விவசாயிகள் பயனடையும் வகையில் நெல், கரும்பு விலையை உயர்த்தியது, கீழ்பவானி அணைக்கட்டு, வீடூர் அணைக்கட்டு திட்டங்களுக்கு ஒப்புதல், பழைய நீர்நிலைகளைச் செப்பனிடுதல், புதிய நீர்நிலைகளை வெட்டுதல் என்று அவர் வகுத்த திட்டங்கள் தமிழ்நாட்டில் வேளாண்மைத்தொழில் செழிக்க வழிவகுத்தன.
திருப்பதியில் அமைந்திருந்த ஓலைச்சுவடி நூலகத்தை ஓமந்தூரார் பார்வையிடச் சென்றபோது அவரைச் சொற்பொழிவாற்றுமாறு கேட்டுக்கொண்டார்கள். தமிழில் பேசத் தொடங்கிய அவரைத் தெலுங்கில் பேசுமாறு கூறினார்களாம்.
“எனக்குத் தெலுங்கு தெரியாது. என் தாயாருக்குத் தெலுங்கில் பேச்சுவழக்குச் சொற்கள் கொஞ்சம் தெரியுமென்றாலும், தெலுங்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது. என் தாய்மொழி தமிழ். நான் தமிழன். என் தாய்மொழியாகிய தமிழிலே பேசுகிறேன்” எனத் தயங்காது கூறினாராம். இவர் ஆட்சியில்தான் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கப்பட்டது. தமிழில் கலைக்களஞ்சியம் உருவாக்க வழிவகை செய்யப்பட்டது. திருக்குறள் முதன்முதலாகப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப்பட்டதும் இவர் ஆட்சியில்தான்.
தமிழ் ஆட்சிமொழியாக்குவதற்கு முதல்கட்டமாகத் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் எல்லா அரசு அலுவலகங்களிலும் தமிழை ஆட்சிமொழியாக்கினார். அரசவைப் புலவராக நாமக்கல் கவிஞரை நியமித்தார். கம்பன் விழா, பாரதி விழா எனத் தமிழ் விழாக்களை அரசு நடத்த ஆணையிட்டார்.
இவ்வளவு சிறப்பாக நடந்த ஆட்சியை ஆளும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எந்த சிபாரிசுக்கும் வழியில்லாத ஆட்சி தேவையில்லை என்றே கருதினர். நிலைமையை உணர்ந்துகொண்ட ஓமந்தூரார் வேறு யாரேனும் முதல்-அமைச்சர் பதவி ஏற்றுக்கொள்ள வழிவிடும் வகையில் 6-4-1949 அன்று பதவி விலகிவிட்டார்.
வடலூரில் நிலம் வாங்கிச் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவினார். 25-8-1970 அன்று உடல்நலக் குறைவால் ஓமந்தூரார் காலமானார். அவர் மறைந்தாலும் முற்றிலும் தூய்மையும் நேர்மையும் மிக்க முதல்வர் ஓமந்தூரார் என்னும் புகழ் நம் நாட்டு வரலாற்றில் என்றும் நின்று நிலவும்.
நன்றி:பேராசிரியர் க.சுபத்திரா