கடந்த ஆண்டுகளில் இந்திய ரயில்வே கட்டமைப்பில் ஏற்பட்ட வளர்ச்சிகள்
இந்திய ரயில்வே கட்டமைப்பில் கடந்த 2021-ம் ஆண்டில் இதற்கு முன் இல்லாத அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே கட்டமைப்பில் கடந்த 2021-ம் ஆண்டில் இதற்கு முன் இல்லாத அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதால், கடந்த 2019ம் ஆண்டிலிருந்து எந்த பயணியும் உயிரிழக்கவில்லை. இந்த நிதியாண்டில் மொத்தம் 22 விபத்துக்கள் நடந்துள்ளன.
சரக்கு போக்குவரத்து:
2021-22ம் நிதியாண்டில் டிசம்பர் 21ம் தேதி வரை 1029.94 மெட்ரிக் டன் சரக்குகள் ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டன. கடந்த நிதியாண்டில் இதே காலத்தில் இது, 870.41 மெட்ரிக் டன்னாக இருந்தது. சரக்கு ரயிலில் சராசரி வேகம் 2021-22ம் ஆண்டில் மணிக்கு 44.36 கி.மீ ஆக அதிகரிக்கப்பட்டது
கட்டமைப்பில் முன்னேற்றம்:
கட்டமைப்பு முதலீட்டுக்கு இதுவரை இல்லாத அளவில் ரூ. 2.15 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2021 நவம்பர் வரை ரூ.1,04,238 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ரயில்வே மின்மயமாக்கத்தில் முன்னேற்றம்:
1924 கி.மீ தூர வழித்தடம் 2021 டிசம்பர் 30ம் தேதி வரை மின்மயமாக்கப்பட்டுள்ளது. 1330.41 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
83 மேம்பாலைகள், 338 சுரங்கப் பாதைகள் 2021 நவம்பர் வரை அமைக்கப்பட்டன. 172 நடை மேம்பாலங்கள், 48 லிஃப்டுகள், 50 எஸ்கலேட்டர்கள் நவம்பர் 21ம் தேதிவரை அமைக்கப்பட்டன.
கிசான் ரயில்:
விவசாயிகள் நலனுக்காக முதல் கிசான் ரயில் சேவை மகாராஷ்டிரா - பீகார் இடையே 2021 ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. 100வது கிசான் ரயிலை பிரதமர் தொடங்கி வைத்தார். கடந்த டிசம்பர் 24ம் தேதி வரை 1806 கிசான் ரயில்கள் 153 வழித்தடங்களில், 5.9 லட்சம் டன் வேளாண் பொருட்களை கொண்டு சென்றுள்ளன.
840 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம் 6089 ரயில் நிலையங்களில் வை- ஃபை வசதி செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 78 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 17 ஆக்ஸிஜன் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 69 ரயில்வே மருத்துவமனைகள், கொவிட்-19-ஆல் பாதிக்கப்பட்ட ரயில்வே ஊழியர்களுக்கு சிகிச்சை அளித்தன. ரயில்வே மருந்துவமனைகளில் கொவிட் சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் 6,972 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. ஐசியு படுக்கைகள் 273 லிருந்து 404-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
தற்போது வரை 899க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் ரயில்கள், 36,840 டன் திரவ ஆக்ஸிஜனை 15 மாநிலங்களுக்கு விநியோகித்துள்ளன. வங்கதேசத்துக்கு 3911.41 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ரயில்கள் மூலம் விநியோகிக்கப்பட்டது.
4,176 ரயில் பெட்டிகள், தனிமை மையங்களாக மாற்றப்பட்டன. மாநில அரசுகளின் வேண்டுகோளின்படி, 324 ரயில் பெட்டிகள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன, இத் தகவலை இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.