முர்முவுக்கு சிவசேனா ஆதரவு: மும்பை பயணத்தை ரத்து செய்த யஷ்வந்த் சின்ஹா
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிப்பதாக சிவசேனா அறிவித்ததை அடுத்து, யஷ்வந்த் சின்ஹா தனது மும்பை பயணத்தை ரத்து செய்துள்ளார்;
இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் சிவசேனா கட்சி முர்முவை ஆதரிக்கும் என்று செவ்வாயன்று தாக்கரே அறிவித்தார். ஒரு பழங்குடி பெண் ஜனாதிபதியாகும் வாய்ப்பைப் பெறுவது இதுவே முதல் சந்தர்ப்பம் என்று கூறினார். பல கட்சித் தலைவர்கள், குறிப்பாக பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த எம்எல்சி ஆம்ஷ்யா பத்வி, முன்னாள் எம்எல்ஏ நிர்மலா காவிட், மற்றும் ஏக்லவ்யா சங்தானாவின் சிவாஜிராவ் தவாலே ஆகியோர் முர்முவை ஆதரிக்குமாறு வலியுறுத்தினர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிப்பதாக சிவசேனா அறிவித்ததை அடுத்து, எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, சனிக்கிழமை நடைபெறவிருந்த மும்பை பயணத்தை ரத்து செய்துள்ளார்.
"மஹா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த சின்ஹாவின் மும்பை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று என்.சி.பி தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சி முர்முவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்ததால் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 18 பேர் உட்பட மக்களவையில் சிவசேனாவுக்கு 19 எம்பிக்கள் உள்ளனர். ராஜ்யசபாவில் மூன்று எம்.பி.க்கள், 55 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 40 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு ஆதரவாக உள்ளனர்.
காங்கிரசுக்கு 44 எம்எல்ஏக்களும், ஒரு மக்களவை மற்றும் மூன்று ராஜ்யசபா உறுப்பினர்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு (என்சிபி) தலா 53 சட்டமன்ற உறுப்பினர்களும், 4 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் உள்ளனர்.
முர்முவின் வாக்கு சதவீதம் 60 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது இது 50 சதவீதமாக இருந்தது.
முர்மு தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை மும்பைக்கு விஜயம் செய்தார், மேலும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் மற்றும் ஷிண்டே தலைமையிலான சிவசேனா உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்தார்.