மூன்றாம் பாலின தம்பதியின் முதல் குழந்தையை வரவேற்றது இந்தியா
கேரளாவில், மூன்றாம் பாலின தம்பதியான சஹத்-சியா தம்பதிக்கு இன்று குழந்தை பிறந்தது.;
கேரள மாநிலம் கோழிக்கோடு – உம்மலத்தூர் பகுதியை சேர்ந்த மூன்றாம் பாலின தம்பதி சஹத்- சியா. இதில் சஹத் பாசில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர். அதேபோல சியா பவல் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். சஹத் ஆணாக மாறியிருந்தாலும் கூட அவரால் கருத்தரிக்க முடியும் என்பதை அறிந்துகொண்ட இத்தம்பதி, மருத்துவ ரீதியாக சிகிச்சைகள் மேற்கொண்டனர். அதன் விளைவாக சஹத் கருவுற்றார்.
அண்மையில் சியா பவல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சஹத்தின் மகப்பேறு கால புகைப்படங்களை பதிவு செய்ததோடு, தங்களின் மூன்று வருட கனவு நிறைவேற போவதாகவும், அம்மா என்ற அழைப்புக்கு காத்திருப்பதாகவும் பதிவிட்டிருந்தார். இணையத்தில் இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதியாக கருதப்படும் சஹத்- சியா தம்பதிக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் கையினை தொடுவது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சியா பவல், தங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.