மகளிர் இடஒதுக்கீடு மசோதா தேர்தல் நேர வண்ணஜாலம்: முதல்வர் ஸ்டாலின்

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்றும், விமர்சித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2023-09-20 06:33 GMT

தமிழக முதல்வர் ஸ்டாலின் 

மக்களவையில் செவ்வாய்க்கிழமை மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளன. தொடர்ந்து, மாநிலங்களவையில் வியாழக்கிழமை இந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளன.

இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்றும், தொகுதி மறுவரையறை குறித்து விமர்சனம் செய்தும் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில், “மகளிர் உரிமைக்கு 75 ஆண்டு காலமாக பாடுபட்டு வரும் தி.மு.க., மகளிர் ஒதுக்கீட்டை அன்றும் வரவேற்றது. இன்றும் வரவேற்கிறது.

சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு சட்டம் மற்றும் முற்பட்ட சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டங்களை நிறைவேற்றுவதில் காட்டிய அக்கறையில் 1 விழுக்காடு கூட மகளிர் மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு காண்பிக்காதது ஏன்?

பெரும்பான்மை பலம் இருந்தும் கடந்த 9 ஆண்டு காலமாகப் பாராமுகமாக இருந்துவிட்டு, தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி ஏமாற்ற நினைக்கும் முயற்சியை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்ற உத்தரவாதம் இல்லை. நடைபெறாத மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதன் அடிப்படையிலான தொகுதி மறுவரையறை, அதன் பேரில் 2029-இல் அமலுக்கு வரப்போவதாக கூறப்படுவதற்கு இப்போது சட்டம் நிறைவேற்றும் விசித்திர தந்திரம், இவை எல்லாம் தோல்வி பயம் ஏற்படுத்தும் தேர்தல் மாய்மாலம்.

தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களை, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் மக்களவைப் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் பேராபத்து உள்ளது. இந்த சூழ்ச்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். தமிழ்நாட்டை வஞ்சிக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை மத்திய அரசு இப்போதே தர வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையில் உள்ள நியாயத்தை பா.ஜ.க. அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News