ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்: யார் இந்த நுபுர் ஷர்மா?
சர்ச்சைக்குரிய அறிக்கைகளுக்கு பெயர் பெற்ற நுபுர் ஷர்மா, தற்போது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்;
அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட்டவர், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர், தொலைக்காட்சி விவாதங்களில் பிரபலமானவர் மற்றும் சர்ச்சைக்குரிய அறிக்கைகளுக்கு பெயர் பெற்றவர் என பிரபலமான நுபுர் ஷர்மா. முன்னாள் செய்தி தொடர்பாளர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பா.ஜ.,வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
மே 26 அன்று ஒளிபரப்பப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது, முகமது நபியைப் பற்றி தெரிவித்த கருத்துக்கள் காரணமாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தற்போது , அவரது மற்றொரு வீடியோ கிளிப் வைரலானது. இது 2008 ஆம் ஆண்டு, அவர் ஆர்எஸ்எஸ்-ன் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது நடைபெற்ற ஒரு சம்பவம்.
முன்னாள் பேராசிரியர்.ஜீலானி, 2001 நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர். "வகுப்புவாதம், பாசிசம் மற்றும் ஜனநாயகம்: சொல்லாட்சி மற்றும் யதார்த்தம்" என்ற தலைப்பில் பேசுவதற்காக டில்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.ஜீலானி கருத்தரங்கில் நுழைந்தபோது, சில மாணவர்கள் அவர் மீது "துப்பிய" சம்பவம் குறித்த தொலைகாட்சி விவாதம் பற்றிய வீடியோ இது.
இந்த சம்பவம் குறித்து பேசுவதற்கு நுபுர் ஷர்மா டைம்ஸ் நவ் சேனலுக்கு அழைக்கப்பட்டார், அங்கு அவர் தன்னை அழைத்த அர்னாப் கோஸ்வாமியிடம், "நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. இதனை எதிர்கொள்வேன். நாடு முழுவதும் அவர் மீது எச்சில் துப்ப வேண்டும். பயங்கரவாதம் குறித்து பேச அவரை பல்கலைக்கழகத்திற்கு அழைத்தது யார்? என கூறினார்.
இதே டைம்ஸ் நவ் சேனல் தான் மே 26 அன்று நுபுரின் கருத்துக்களை ஒளிபரப்பிய சேனல்
சர்மா தனது கல்லூரி நாட்களில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) சார்பாக டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். காங்கிரஸின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI) ஆதிக்கம் செலுத்தி வந்த டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தில் ஏபிவிபியின் எட்டு ஆண்டு கால வறட்சியை முறியடித்து அவர் வெற்றி பெற்றார் .
நுபுர் ஷர்மாவின் வெளிப்படையான பேச்சு, டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் (LSE) இல் முதுகலைப் பட்டம் ஆகியவை, வாஜ்பாய்-அத்வானி காலத்தில் இருந்து மெதுவாக வெளிவந்து கொண்டிருந்த கட்சிக்குள் தொழில் முன்னேற்றத்திற்கான நல்ல பாதையில் அவரை அழைத்துச் சென்றது.
பின்னர், பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் முக்கிய முகமாக, ஷர்மா கட்சி அணிகளில் விரைவாக உயர்ந்தார்.
2020 ஆம் ஆண்டில் அவர் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார், அப்போது கட்சியின் தலைவர் ஜேபி நட்டா செய்தித் தொடர்பாளர் குழுவை மறுசீரமைத்து பல்வேறு பின்னணியில் இருந்து புதிய முகங்களை நியமித்தார்.
2015 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக சர்மாவைத் தேர்ந்தெடுத்தது, ஆனால் அவர் 31,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
2015ல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திருமதி ஷர்மாவை கட்சி கேட்டுக் கொண்டது. அவர் வெற்றி பெறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அது அவரை நாடறிய செய்தது. பின்னர், அவர் முதலில் டெல்லி பாஜகவின் செய்தித் தொடர்பாளராகவும், பின்னர் 2020ல் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் ஆனார்.
ஞானவாபி கோப்புகள் என்ற தலைப்பில் மே 26 அன்று நடந்த விவாதம் அதிக கவனத்தை ஈர்க்காமல் வந்து போனது. முஹம்மது நபி பற்றிய அவரது கருத்துகளின் கிளிப் வைரலாக பரவிய பிறகுதான் விஷயங்கள் மோசமாகின. கான்பூரில் முஸ்லீம் அமைப்பினர் போராட்டங்களை நடத்தி, வன்முறை வெடித்தது. மேற்கு ஆசிய நாடுகள் எதிர்வினையாற்றத் தொடங்கியபோது, பாஜக நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது,
தீவிரவாத குழுக்களிடம் இருந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்தபோதும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது பாஜகவின் சமூக ஊடகப் போராளிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிப்படையாக பேசுவதை ஊக்குவிக்கும் ஒரு கட்சியால் அவர் தற்போது கைவிடப்பட்டார். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்று அவர்களை நம்ப வைக்க பாஜக கடுமையாக உழைக்க வேண்டும்.