ரூபாய் நோட்டுக்கள், நாணயங்களை அச்சிட முடிவு செய்வது யார்?
இந்தியாவில் எவ்வளவு ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை அச்சிட முடிவு செய்பவர் யார்? என்பது குறித்து பார்ப்போம்.
நாட்டில் எவ்வளவு ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட வேண்டும் என்பது பெரும்பாலும் புழக்கத்தின் அடிப்படையில் வருடாந்திர அதிகரிப்பு, அழுக்கடைந்த நோட்டுகளை அகற்றுதல், இருப்புத்தேவைகள் ஆகியவற்றைப் பொருத்து இந்திய ரிசர்வ் வங்கியால் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் எவ்வளவு நாணயங்கள் அடிக்கப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்கிறது.
ரூபாய் நோட்டுகளின் தேவையை பொருளாதார வளர்ச்சி விகிதம், மாற்றீடு செய்யும் தேவை, இருப்புத்தேவைகள் ஆகியவற்றைப் புள்ளியியல் முறைகளில் கணக்கிட்டு ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்கிறது.
மேலும் சென்னை, அகமதாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், நவி மும்பை, கொல்கத்தா, சண்டிகார், கவுஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, மும்பை , நாக்பூர், புதுடில்லி, பாட்னா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களின் மூலம் பணச் செயல்பாடுகளை மேற்கொள்கிறது. இந்த அலுவலகங்கள் ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் அச்சகங்களிலிருந்து புதிய ரூபாய் நோட்டுக்களை நேரடியாகப் பெறுகின்றன.
அதைப்போன்றே நாணயங்களை கோல்கத்தா, ஹைதராபாத், மும்பை, புதுடில்லி ஆகிய இடங்களில் அமைந்துள்ள ரிசர்வ் வங்கியின் நாணயக் கூடங்களிலிருந்து மற்ற ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்புகின்றன.
ரூபாய் நோட்டுகளும், நாணயங்களும் பண அறையிலும், சிறு நாணயங்கள் சிறு நாணயக்கூடத்திலும் இருப்பு வைக்கப்படுகின்றன. வங்கியின் கிளைகள் பண அறையிலிருந்தும், சிறுநாணயக் கூடத்திலிருந்தும் ரூபாய் நோட்டுக்களையும் நாணயங்களையும் பெற்று பொதுமக்களுக்கு வழங்குகின்றன.