வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் கார்டை இணைக்க வகை செய்யும் மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தேர்தல்களின்போது நியாயமாக வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதாக குறிப்பிட்டார்.
இதன்படி, தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா- 2021, வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்கள், புதிதாக வாக்காளர்களாக சேருவோரிடம் ஆதார் எண்ணை கேட்டுப்பெற வழிவகை செய்யும்.
ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவது, இதன் மூலம் தடுக்கப்படும். அதே நேரம், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை விடுத்தன. எனினும், அமளிக்கு இடையே மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.