விநாயகர் சதுர்த்தி: நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
"விநாயகர் சதுர்த்தி புனித நாளை முன்னிட்டு நமது நாட்டின் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அறிவு, வளம் மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக போற்றப்படும் பகவான் விநாயகர் பிறந்ததை விநாயக சதுர்த்தி குறிக்கிறது. ஒருவரது முயற்சிகளில் ஏற்படும் தடங்கல்களை போக்குவதற்கு விநாயகரின் திருநாமத்தை உச்சரிப்பது இந்தியாவின் வழக்கமாகும்.
ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி அன்று மக்கள் தங்கள் வீடுகளுக்கு வண்ணமயமான விநாயகர் சிலைகளை அன்போடும் பக்தியோடும் கொண்டு வந்து, கடவுளை பயபக்தியுடன் வணங்குவர். பத்து நாட்களுக்கு கொண்டாடப்படும் இந்த விழாவின் போது பிரார்த்தனைகள், பெரிய கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவை நடைபெற்று, இறுதி நாளன்று சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதில் நிறைவடையும். பிறப்பு, வாழ்வு மற்றும் இறப்பு எனும் சுழற்சியையும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் பிரதிபலிக்கின்றன.
சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதென்பது பகவான் விநாயகர் கைலாசத்திற்கு திரும்புவதை குறிப்பதாக நம்பப்படுகிறது. இந்த பண்டிகையானது நாடு முழுவதும் வழக்கமான பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வந்தாலும், பெருந்தொற்றின் காரணமாக நாம் இதை கட்டுப்பாடுகளோடும், எச்சரிக்கையோடும் முறையான கோவிட் நடத்தை விதிமுறைகளை பின்பற்றியும் இந்த வருடம் கொண்டாட வேண்டும். அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியை நமது நாட்டில் இந்த பண்டிகை உண்டாக்கட்டும்," என்று தமது வாழ்த்து செய்தியில் குடியரசு துணைத் தலைவர் கூறியுள்ளார்.