வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாக போகிறது வந்தே பாரத் ரயில்கள்

வந்தே பாரத் ரயில்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாக போகிறது என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Update: 2024-03-03 17:14 GMT

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்துவது. ரயிலின் வசதிகளை மேம்படுத்துவது என மிகப்பெரும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படிதான் வந்தேபாரத் ரயிலும் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்பிறகு பல்வேறு வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் சென்னை - கோவை, சென்னை - நெல்லை, சென்னையில் இருந்து கோவை வழியாக மைசூரு வரை, கோவை - பெங்களூர் ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விரைவில் மதுரை பெங்களூர் இடையேயும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள், ரயில் பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. விரைவில் தொலை தூரங்களுக்கு பயணிக்கும் விதமாக வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி கொண்ட ரயிலும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதிநவீன வசதிகளை கொண்ட அம்ரித் பாரத் ரயில்களையும் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "வந்தே பாரத் ரயில்களை ஏற்றுமதி செய்வதற்கான பணிகளை ரயில்வே தொடங்கியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் வந்தே பாரத் ரயிலின் ஏற்றுமதி நடைபெறும். மோடியின் ஆட்சியில் பல்வேறு ரயில்வே திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலம் மற்றும் மேற்கு வங்காளத்தில் நதிக்கு அடியில் ரயில்வே பாதை அமைக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட அம்ரித் பாரத் ரயிலை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் ஆண்டுகளில், 1,000 புதிய அம்ரித் பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும். மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய ரயில்கள் தயாரிக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. பயணிகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 1.27 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

Tags:    

Similar News