உத்தரப்பிரதேச சட்டசபைத்தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
உத்தரப்பிரதேசத்தில், ஏழு கட்டமாக நடைபெறும் சட்டசபைத் தேர்தலில், முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது.;
உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறத். இதில், உத்தரபிரதேசத்தில் பிப்.10 முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி உள்ள உத்தரப்பிரதேசத்தில் இன்று, 58 தொகுதிகளில், முதல் கட்ட வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு, 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மாநில அமைச்சர்கள் ஆவர். இந்த 58 தொகுதிகளில், 53 தொகுதிகள் பா.ஜ.க. வசம் உள்ளவை. தலா 2 தொகுதிகள், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வசம் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தில், ஆளும் பாஜக, சமாஜ்வாடி-லோக்தளம் கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் என 4 முனை போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு, 58 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய படையினரும், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில், 2-ம் கட்டமாக 55 தொகுதிகளுக்கு வரும் 14-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.