கொவிட்-19 பாதிப்புகளின் அதிகரிப்பை தொடர்ந்து 12 மாநிலங்களுடன் உயர்மட்ட கூட்டத்தை மத்திய சுகாதார செயலாளர் நேற்று நடத்தினார்
அதிகளவில் கொவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்து வரும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடனான உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் ஒன்றுக்கு மத்திய சுகாதார செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் தலைமை வகித்தார்.
இம்மாநிலங்களின் கூடுதல் தலைமை செயலாளர்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர்கள், அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 46 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, தமிழ்நாடு, சத்திஷ்கர், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், தில்லி, ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் பிகார் ஆகியவை கூட்டத்தில் பங்கேற்ற மாநிலங்கள் ஆகும். நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பாலும் இதில் கலந்து கொண்டார்.
இம்மாதத்தில் நாடு முழுவதும் பதிவான 71 சதவீத தொற்றுகள் மற்றும் 69 சதவீத உயிரிழப்புகள் 46 மாவட்டங்களில் பதிவாகியுள்ளன. கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கூட்டத்தின் போது ஐந்து முனை யுக்தி ஒன்று வகுக்கப்பட்டது.
பரிசோதனைகளை மிக அதிகளவில் நடத்துதல்: பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் தனிமைப்படுத்தி அவர்களின் தொடர்புகளை கண்டறிதல்; பொது மற்றும் தனியார் சுகாதார வளாகங்களை மீண்டும் தயார்நிலையில் வைத்தல்; சரியான கொவிட் நடத்தை விதிமுறையை உறுதி செய்தல்; மற்றும் அதிகளவில் பாதிப்புகளை பதிவு செய்து வரும் மாவட்டங்களில் தடுப்பு மருந்து வழங்குவதற்கான இலக்கு சார்ந்த அணுகுமுறை ஆகியவையே இந்த ஐந்து முனை யுக்தி ஆகும் நேற்று நடந்த கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது